முகப்பு / Ikke kategoriseret / பண்ணிசை 2018

பண்ணிசை 2018

 

ஒளவையார் பிரிவு

 இவர்கள் தாம் விரும்பிய ஒரு தேவாரமும்
ஆத்திசூடியும் பாடுதல் வேண்டும். இவர்களுக்குத் தங்கப் பதக்கம் வழங்கப்பட மாட்டாது. வெற்றிக்கான கிண்ணங்கள் வழங்கப்படும்.

இது மழலைகளுக்கான பிரிவு (31-07-2012 க்குப் பினனர் பிறந்தவர்கள்).

தேவாரம் 1
சொற்றுணை வேதியன்
அப்பர் தேவாரம்
பண்: காந்தாரபஞ்சமம்
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

தேவாரம் 2

மந்திரமாவது நீறு
சம்பந்தர் தேவாரம்
பண்: காந்தாரம்
தலம்: திருவாலவாய்

  1. மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
    சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
    தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு    `
    செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே

சம்பந்தர் பிரிவு

(01-08-2009 தொடக்கம் 31-07-2012 வரையுள்ள பாலர்பிரிவுப் பிள்ளைகள்) 

இரண்டு தேவாரங்களுள் ஒன்றுடன் தரப்பட்டுள்ள புராணத்தையும் பாடுதல் வேண்டும்.

 தேவாரம் 1

அன்னம் பாலிக்கும்
அப்பர் தேவாரம்
தலம்: சிதம்பரம்

அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.

 

தேவாரம் 2

பிடியதனொருவுமை
சம்பந்தர் தேவாரம்
பண்:வியாழக்குறிஞ்சி
தலம்:திருவலிவலம்

பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.

புராணம்

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

 

 

அப்பர் பிரிவு

(01-08-2006 தொடக்கம் 31-07-2009 வரையுள்ள கீழ்ப்பிரிவுப் பிள்ளைகள்) 

இரண்டு தேவாரங்களுள் ஒன்றுடன் தரப்பட்டுள்ள திருவாசகத்தையும்
புராணத்தையும் பாடுதல் வேண்டும்.

தேவாரம் – 1

தாயினும் நல்ல தலைவர்
சம்பந்தர் தேவாரம்
பண்: புறநீர்மை
தலம்: திருகோணமலை

தாயினும் நல்ல தலைவர்
தாயினும் நல்ல தலைவர் என்றடியார்
தம்மடி போற்றிசைப்பார்கள்
வாயினும் மனத்தும் மருவி நின்றகலா
மாண்பினர் காண்பலவேடர்
நோயிலும் பிணியும் தொழிலர் பால்நீக்கி
நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த
கோணமாமலை அமர்ந்தாரே.

தேவாரம் – 2

தம்மையே புகழ்ந் திச்சை பேசினும்
சுந்தரர் தேவாரம்
பண்: கொல்லி
தலம்: திருப்புகலூர்

தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்
சார்வினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மையாளரைப் பாடாதே
எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்!
இம்மையே தரும் சோறும் கூறையும்;
ஏத்தல் ஆம் இடர் கெடலும் ஆம்;
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.

திருவாசகம்

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்
விரையார்கழற்குஎன்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி
வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய
போற்றியென்னும்
கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக்
கண்டுகொள்ளே

புராணம்

ஐந்துபேரறிவும் கண்களே கொள்ள
அளப்பருங் கரணங்கள் நான்கும்
சிந்தையே யாகக் குணம் ஒரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே யாக
இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.

சுந்தரர் பிரிவு

(01-08-2003 தொடக்கம் 31-07-2006 வரையுள்ள மத்தியபிரிவுப் பிள்ளைகள்) 

தரப்பட்டுள்ள தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா,
திருப்பல்லாண்டு, புராணம் ஆகியவைகளைப் பாடுதல் வேண்டும்.

தேவாரம்

 மாதர்ப்பிறைக்கண்ணி
அப்பர் தேவாரம்
பண்: காந்தாரம்
தலம்: திருவையாறு

மாதர் பிறை கண்ணியானை
மலையான் மகளொடும்
பாடி
போதொடு நீர்சுமந்தேத்தி
புகுவார் அவர்பின் புகுவேன்
யாதும் சுவடுபடாமல்
ஐயாறு அடைகின்ற போது
காதல் மடப்பிடியோடு
களிறு வருவன கண்டேன்.
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.
 
 

திருவாசகம்

முத்திநெறி அறியாத
மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப்
பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச்
சிவமாக்கி எனை ஆண்ட
அத்தன்எனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே

திருவிசைப்பா

ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்குந் தேனே
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே

திருப்பல்லாண்டு

பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்
பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே 

புராணம்

தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன்
திருநடம் கும்பிடப் பெற்று
மண்ணிலே வந்த பிறவியே எனக்கு
வாலிதாம் இன்பம்ஆம் என்று
கண்ணில் ஆனந்த அருவிநீர் சொரியக்
கைமலர் உச்சிமேற் குவித்துப்
பண்ணினால் நீடி அறிவரும் பதிகம்
பாடினார் பரவினார் பணிந்தார்.

 

மணிவாசகர் பிரிவு

( 31-07-2003 க்கு முன்னர் பிறந்த மேற்பிரிவினர்)

 தேவார,  திருவாசகம், திருவிசைப்பா
திருப்பல்லாண்டு, புராணம், திருப்புகழ் வாழ்த்து ஆகியவைகளைப் பாடுதல் வேண்டும்.

தேவாரம் 

பாடல் வீணையர்
சம்பந்தர் தேவாரம்
பண்: நட்டராகம்
தலம்: திருக்கேதீச்சரம்

பாடல் வீணையர் பலபல சரிதைய ரெருதுகைத் தருநட்டம்
ஆடல் பேணுவ ரமரர்கள் வேண்டநஞ் சுண்டிருள் கண்டத்தர்
ஈடமாவது விருங்கடற் கரையினி லெழிறிகழ் மாதோட்டங்
கேடி லாதகே தீச்சரந் நொழுக் கெடுமிடர் வினைதானே.

திருவாசகம்

பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன்
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்

திருவிசைப்பா

கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்
திருவீழி மிழலைவீற் றிருந்த
கொற்றவன் றன்னைக் கண்டுகண் டுள்ளம்
குளிரஎன் கண்குளிர்ந் தனவே. 

திருப்பல்லாண்டு

மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
புவனியெல் லாம்விளங்க
அன்ன நடைமட வாள்உமை கோன்அடி
யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே

புராணம்

 இறவாத இன்ப அன்பு
வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன்
அடியின்கீழ் இருக்க என்றார் 

திருப்புகழ்

நாடித் தேடித்- தொழுவார்பால்
நானத் தாகத் – திரிவேனோ
மாடக் கூடற் – பதிஞான
வாழ்வைச்சேரத் – தருவாயே
பாடற் காதற் – புரிவோனே
பாலைத் தேனொத் – தருள்வோனே
ஆடற் றோகைக் – கினியோனே
ஆனைக்கா விற் – பெருமாளே

வாழ்த்து

வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி
விளங்குக உலகமெல்லாம்

மேலும் வாசிக்க

பொன்னண்ணா 80 வது பிறந்த தினம்.

எமது டென்மார்க் சைவத் தமிழ் பண்பாட்டுப் பேரவையின் ஸ்தாபகரும் காப்பாளருமான அமரர் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் 80 வது …