முகப்பு / FrontPicture / தர்மம் – தொகுப்பு செல்வி ஹரிகரன்

தர்மம் – தொகுப்பு செல்வி ஹரிகரன்

 தர்மம்

தர்மம் என்பதை நிலைநாட்டுவதற்கு நியாய வழியே சிறந்தது என்றாலும் பல நேரங்களில் அந்த வழி கடைப்பிடிப்பவர்களை தோல்வியின் பக்கம் தள்ளி விடுகிறது. இதனால் தர்மத்தை நிலை நாட்டுவதற்காக முரண்பாடான வகைகளையும் கையாளலாம் என்ற கருத்து மஹாபாரதத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. பாரதப்போரில் அதர்மத்திற்குத் துணையாக நின்றவ ர்கள் பீஷ்மர், துரோணர், கர்ணன், துரியோதனன் போன்ற அசாதாரண புருஷர்களே ஆகும். இவர்களை நேரான வழியில் வெல்வது என்பது மலடியின் மகன் கொம்பு உள்ள முயலை படிப்பதற்கு சமானமாகும். எனவே அத்தகைய வல்லமையாளர்களை ஒழித்துக்கட்ட சூழ்ச்சி முறைகளை கையாளுவது தவறல்ல என்பதும் அறநெறியிலிருந்து பிசகுவதால் ஏற்படும் பாவம் இக்காரணத்தை முன்னிட்டு நம்மைத் தாக்கினாலும் தவறல்ல என்பதே ஸ்ரீகிருஷ்ணனின் கோட்பாடாகும். இத்தகைய நடைமுறைக்கு சாத்தியமான ஏராளமான கருத்துக்கள் பாரதக்கதையில் சொல்லப்பட்டு இருக்கிறது.
அதர்மவாதிகளான கௌரவர்களுக்குத் துணையாகக் கருதப்படும் கதாபாத்திரங்களின் மன இயல்பு விதவித மான வகையில் அமைந்து உள்ளதைக் காணலாம். துரி யோதனன் செய்வது முற்றிலும் தவறு என்று பீஷ்மருக் கும் துரோனர் மற்றும் கிருபருக்கும் நன்றாகத்தெரிந்து இருந்தும் பாண்டவர்களின் பக்கம் அவர்கள் வரவில் லை. பாண்டவர்களின் தாய்மாமனான சல்லியன் கூட சுயதர்ம சங்கடத்தில் துரியோதனன் பக்கமே நின்றான் இதையெல்லாம் விட வியப்பு பாண்டவர்களின் முழுமை யான காப்பாளனாக இருந்த ஸ்ரீபரமாத்மா கிருஷ்ணன் கூட தனது படை உதவியை துரியோதனனுக்கே கொடு த்தான். இத்தனை உயரிய பெரிய துணை இருந்தும் யுத்தத்தின் முடிவில் கௌரவர்கள் யாரும் உயிருடன் தப்பமுடியவில்லை. இந்த சம்பவங்கள் எல்லாம் மிக நுணுக்கமான தர்மங்களை நமக்கு கற்றுத்தருகிறது.
 

 

சமயமும் திருக்குறளும்

உலகப் பொதுமறை திருக்குறளை திருவள்ளுவர் உலகுக்கு தந்தார். ஆனால் பல சமயத்தவர் இது தங்கள் சமயத்தை குறிப்பிடுகிறது எனக் கூறினாலும் , திருக்குறள் சமய சார்பற்றது என்று சில அறிஞர்கள் கூறுகின்றார்கள் . உதாரணமாக சில குறள்களை மட்டும் நாம் எடுத்துக் கொண்டு பார்போம். 
திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்து பகுதியில் முதல் குறளாய் இருக்கும் திருக்குறளையே இங்கு முதலில் எடுத்துக் கொள்வோம்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு. (குறள் -1)

அகர ஒலியே எல்லா எழுத்துக்களுக்கும் முதலாவதாக இருக்கிறது. இது போல் ஆதிபகவன் உலகிலுள்ள உயிர்கள் அனைத்திற்கும் முதல்வனாக இருக்கிறான் என்பதே… இதன் பொருளாகும். தமிழில் முதன்மையாக இருக்கும் எழுத்து “அ” என்பதுதான். அகரத்திற்குத் தமிழ் எழுத்துக்களில் முதல் மரியாதை உண்டு. இன்னொரு சிறப்பும் இந்த எழுத்துக்கு இருக்கிறது. அதாவது, தமிழில் உள்ள அனைத்து எழுத்துக்களிலும் உள்ள கோடுகள், வளைவுகள் எல்லாம் “அ” எனும் எழுத்து ஒன்றிலேயே அடங்கியிருக்கின்றன. அகரத்திலுள்ள மேற்சுழி, குறுக்குக்கோடு (-), நேர்கோடு (|), கீழ்வளைவு ஆகிய இந்த நான்கு குறியீடுகளையும் வைத்துத்தான் தமிழின் ஏனைய எழுத்துக்கள் அனைத்தும் உருவாகியுள்ளன என்ற கருத்தை அறிஞர்கள் குறி ப்பிடுகின்றனர்.
உலகத் தோற்றம் கதிரவனிடமிருந்து தோன்றியதென்பர். அவ்வாறு தோன்றி தொங்கிய நிலையில் ஞாலம் என்ற பெயர் அமைந்தது என்றும் கூறுவர். இவ்வாறு தோன்றி நிலைத்த நிலப்பரப்பில், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்த பின்னர் உயிர்த்தோற்றம் ஏற்படலாயிற்று என்று சொல்வதுண்டு. உயிர்த் தோற்றத்தின் முதன்மையாகக் கூறப்படும் கதிரவனைத்தான் ஆதிபகவன் என்கிற பெயரில் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். இக்குறளில் திருவள்ளுவர் இயற்கையை வலியுறுத்திச் சிறப்பித்திருக்கிறார். இங்கு அவர் எந்தவொரு சமயத்தையும் முன்னிறுத்திப் பார்க்கவில்லை.
அடுத்ததாக ஒருகுறளைப் பார்ப்போம் . 

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின். (குறள் -2)

தூய அறிவு வடிவானவனின் நன்மை தரும் திருவடிகளைத் தொழாதவர் என்றால், அவர் கற்றதனால் உண்டான பயன் யாதுமில்லை என்பது இதன் பொருள். மனிதன் கல்வி கற்று அறிவைப் பெருக்கிக் கொள்கிறான். கல்வியும் அறிவும் எவ்வளவு வளர்ந்தாலும் மனிதன் அந்தத் துறைகளில் முழுத்தூய்மை பெறுவது இல்லை. மனித அளவில் மூன்று குறைகள் குறிப்பிடத்தக்கனவாக உள்ளன. அறிவு பெருகப் பெருக அறியாமையும் நிழல் போல் தொடருகிறது. அறிவுப் பெருகப் பெருக ஐயமும் விடாமல் தொடருகிறது. அறிவு பெருகப் பெருக ஒன்றை வேறொன்றாகக் கொள்ளும் மருட்சி தோன்றுகிறது. இருள், ஐயம், மருள் ஆகிய மூன்றும் நீங்கிய ஒருவன் “வாலறிவன்” என்று இக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வாலறிவன் என்பதை, எந்தச் சமயத்தின் கடவுளோடும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியதில்லை. எந்த சமயத்தின் தனிக் கருத்துகளும் இங்கு இடம் பெறவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 
இரண்டு குரல்களைப் பார்த்தோம் . இன்னும் ஒரு குறளைப் பாக்கலாமா! 

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் 

தாளை வணங்காத் தலை. (குறள்-9)

அதாவது எண் வகைக் குணங்களில் உருவான மேன்மையானவன் திருவடிகளை வணங்காத் தலை, கேளாக் காதும், காணாக் கண்ணும் போலப் பயனில்லாதது என்பது இக்குறளின் பொருள் என அறிஞர் கூறுவார். .
கடவுளுக்கு குணமுண்டா? அதுவும் எட்டு வகையான குணமுண்டா? இக்குறளில் கடவுள் எண்குணத்தான் என்று எப்படி சுட்டிக்காட்டப்படுகிறார்? எண்குணத்தான் என்பதற்கு, எண்ணியபடி குணம் கொண்டவன் என்றும் கூட பொருள் கொள்ளலாம். இப்படியிருக்க, எண்குணத்தான் என்பது தங்கள் சமயத்தின் இறைவனையே குறிப்பிடுகிறது என்று சொல்லிக் கொள்வதில் பொருள் எதுவுமில்லை. 
எட்டு வகையான குணங்கள் மனிதனின் எட்டு வகையான மெய்ப்பாடுகளையே குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தில் ஒரு பாடல் இருக்கிறது. 

“நகையே அழுகை இனிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகைஎன

அப்பால் எட்டே மெய்ப்பாடென்ப” (தொல்காப்பியம். மெய்ப்பாட்டியல் நூ-3)

 

சிரிப்பு, அழுகை, துன்பம், மயக்கம், அச்சம், பெருமிதம், சினம், மகிழ்ச்சி என மெய்ப்பாடுகள் எட்டாகும் என்பதே இந்தத் தொல்காப்பியப் பாடலின் பொருள். இந்த எட்டு வகையான மெய்ப்பாடுகளும் எட்டு வகையான குணங்களின் அடிப்படைகளாக இருக்கின்றன. எட்டு மெய்ப்பாடுகளில் சிறப்புற்று விளங்குபவன் மனிதன் எனும் நிலையிலிருந்து மேம்பட்டவனாக இருக்கிறான். அவனின் திருவடிகளை வணங்கி, அவன் வழியாக நல்லவைகளைப் பார்த்திட வேண்டும், நல்ல செய்திகளை அறிந்திட வேண்டும், அப்படியே அவன் வழியைக் கடைப்பிடித்து நாமும் நல்வாழ்க்கையினை அடைந்திட வேண்டும் என்பதையே திருவள்ளுவர் வலியுறுத்தி இருக்கிறார்

எனவே இந்த உலகில் பற்று கொண்டு, நல்லெண்ணத்துடன் நல்வாழ்க்கை வாழ வேண்டும் என்று புதியதொரு கருத்தைக் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர், சமயக் கருத்தாளர்களுக்கு மாறுபட்ட கருத்தினைக் கொண்டவர். அவரைக் குறிப்பிட்ட சமயத்தவர் என்றும், அவர் இயற்றிய திருக்குறள் நூலைக் குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்தது என்றும் கருதுகிற பார்வையை நாங்கள் மாற்றிட வேண்டும். திருக்குறளை உலகப் பொதுமறையாகப் போற்றிட வேண்டும்.

   

  அன்பு கொண்ட உள்ளம்

 அன்பு கொண்ட உள்ளத்தை விட அகிலத்தில் உயர்ந்தது வேறென்ன? அந்த அன்பால் உறவுகளை அணைப்போம். அந்த உறவுகள் தான் வாழ்க்கையை உன்னதமாக்கும்! விட்டுக் கொடுத்தலும் சரியான புரிதலும் இல்லாதபோது குடும்பக் கோவிலின் கட்டுமானம் குலைந்துதான் போகும். விட்டுக் கொடுத்தலில்தான் மனப்பூர்வமான மகிழ்ச்சி இருக்கிறது. உறவுகளுக்காக உதவிக்கரம் நீட்டுவதில்தான் நிஜமான நேசத்தின் நிறம் தெரிகிறது.பிறரைப் பற்றிய சிந்தனையற்ற ஓட்டம்மனிதனைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றது. சுயநலத் தேடல்க ளும் இயந்திர வாழ்க்கையின் வேகமும், ‘மனிதம்’ காணாமல் போய்விடும் அபாயத்தை உணர்த்துகின்றன.

அனைவரையும் நேசிப்பதிலும், அன்பைப் பகிர்ந்துகொள்வதிலும் தான் மனித வாழ்க்கையின் நிஜமான வெற்றி அடங்கியிருக்கின்றது. டொலர், தினார், யூரோ கனவுகள் இளைஞர்களின் வாழ்க்கையில் குடும்ப உறவுகளைக் கூறு போட்டன. கூட்டுக் குடும்பக் கட்டிடம் தகர்ந்து தரைமட்டமாகிக் கொண்டிருக்கின்றது.ஒரு காலத்தில் தெரு வழியே வருகிற அந்நிய மனிதர்கள் உட்கார்ந்து செல்வதற்காகவே கட்டப் பட்ட திண்ணைகள் இன்று காணாமல் போய்விட்டன. நான் எனது என்ற எல்லையில் எல்லாமே சுருங்கிப் போய்விட்டன. திண்ணைகள் இடித்து திருக்கோலமாய் வீட்டிற் குள்ளேயே வரவேற் பறைகள் வந்துவிட்டன.வரவேற்பறைகளில் மயக்கும் வண்ணங் கள், கால் பதிக்க பட்டு விரிப்புகள், அமர அழ கான இருக்கைகள், கண் சிமிட்டும் தொலை காட்சிப் பெட்டிகள், மின் விளக்குகள், கலை மணம் கமழும் வாச னைத் திரவியங்கள், செயற்கைப் பூக்கள், மனித பொம் மைகள் எல்லாமே இருக்கின் றன. ‘மனிதம்’ இருக்கிறதா? என்பதே கேள்வி.

வீடு என்பது வெறும் கூடு அல்ல! பரம்பரை பரம்பரையாகப் பேணிப் பாதுகாக்கப்பட்ட கூட்டுக் குடும்ப மாளிகை சிதைந்து இன்று ஒவ்வொரு வீடும் தனித்தனி கூடுகளாகிப் போயின. வீடுகளும் கூடுகளும் வெவ்வேறானவை. வீடு என்பது வாழ்தலுக்கானது கூடு என்பது வசித்தலுக்கானது. வாழ்தல் என்பது வேறு. வசித்தல் என்பது வேறு. வாழ்தல் என்பது மனிதர்க ளுக்கானது. ஆம், மனிதர்கள் வாழக் கூடியவர்கள், வாழ்வாங்கு வாழக் கூடியவர்கள். பறவைகளும், மிருகங்களும் வசிக்கக் கூடியவை.அடைபடுகிற கூடுகளாய் பலரது வீடுகள் மாறிவிட்டன. உலகமயமாக்க லின் சாளரங்கள் திறந்து விடப்பட்டதில் வாழ்க்கையின் விழுமியங்கள் சிதறிப்போயின. குறிப்பாக இளை ஞர்களின் வாழ்க்கையை நினைத்துப் பார்கையில் நெஞ்சம் வேதனையில் விம்முகிறது.

இன்று குடும்ப வழக்கு மன்றங்களில் வாடிய முகங்களுடன் இளம் தம்பதிகள். விவாகரத்திற்காக காத்துக்கிடக்கிறார்கள். தம்பதிகளின் எண்ணிக்கையோ நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கின்றது. வேக வேகமாகத் திருமணம், வேகவேகமாகவே விவாகரத்து,வேதனை என்னவென்றால் இவர்களெல்லாம் காலச் சூழலில் உறவுகளின் புனிதம் புரியாத இளம் காளையரும் கன்னியரும். நுகர்வுக் கலாசாரம் ஐம்புலன்களின் அடக்கத்தைக் கற்றுத் தரவில்லை. மாறாக புலன் அடக்கமற்ற தன்மையைப் பெரிதாக உருவாக்கிவிட்டது. வரம்பற்ற இன்பத்தை அனுபவிக்கப் பணம் தேவைப்படுகிறது. படிக்கின்றபோதே வேலை. படித்து முடித் ததுமே கை நிறைய பணம். பணம் புரளப்புரள மனது அலைபாய்கிறது. ஆணும் பெண்ணுமாக பேதமற்று கலப்பதுமே அவர்களுக்கு மகிழ்ச்சி யாகத் தெரிகிறது. பெற்றோர்களையும், உறவுகளையும் உதறித் தள்ளிவிட்டு அவர்களா கவே குடும்ப வாழ்க்கை யைத் தேடிக் கொள்கி றார்கள். இப்படிப் பட்டவர்களை நினைக்கை யில் ஆமையின் கதை தான் நினைவுக்கு வருகி றது.

குளிர்ந்த நீரில் விறைத்துக் கிடக்கும் ஆமையை சமைத்து உண்பவர்கள் முதலில் அதை உலையில் போடுவார்கள். உலை நீரில் வெப்பம் தொடக்கத்தில் வெது வெதுப்பாக இருக்கும். இந்த இதமான வெப்பம் ஆமைக்கு இன்பமாக இருக்கும். அந்த சுகம் தரும் போதையில் ஆமை கொதிகலனில் நின்றும் ஓடியும் ஆனந்தக் கூத்தாடும். வெப்பம் அதிகமானதும் ஆமை துடித்து இறந்துபோகும்.முதலில் இன்பம் தந்தது எதுவோ அதுவே கடைசியில் துன்பமாய் முடியும். இந்த ஆமையின் நிலை யில்தான் இன்றைய இளைஞர்கள் பலர் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

உறவுகளையும் பந்தங்களையும் பாசங்களையும் உதறித் தள்ளி விட்டு, தான்மட்டும் முன்னேற வேண்டும். தனக்கு வேறு யாரும் தேவையில்லை என்ற சுய நலத்தில் ஓட ஆரம்பித்ததன் விளைவு இது.அன்பு கொண்ட உள்ளத்தை விட அகிலத்தில் உயர்ந்தது வேறென்ன? அந்த அன்பால் உறவுகளை அணை ப்போம். அந்த உறவுகள் தான் வாழ்க்கையை உன்னதமாக்கும

  

 அடுத்தது காட்டும் பளிங்குபோல்..,

நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம். என்று திருவள்ளுவர் மனதிற்கும் முகத்துக்கும் உள்ள தொடர்பினை விளக்குவதற்காக எழுதிய குறள். தனக்கு அருகில் இருப்பதை பளிங்கு அப்படியே பிரதிபலிப்பது போல முகம் என்பது மனதில் இருப்பதை அப்படியே பிரதிபலிக்கும் என்ற கருத்திலுருந்து மனதை, மனதின் பல்வேறு உணர்ச்சி நிலைகளை அப்படியே முகத்தில் காணலாம் என்ற உண்மையை தெளிவாக்குகிறது, 

மனம் தோல்வியினால் துவண்டுவிடாமல் உறுதியோடு இயங்குமானால் உடல் பலம்பெற்று ஊக்கத்தோடு செயல்பட ஏதுவாகும். ஹெலன் கெல்லர் போன்றவர்கள் உடல் உறுப்புகள் பழுதான நிலையிலும் உள்ளத்தின் உறுதியினால் செயற்கறிய வெற்றிகளைக் குவித்தார்கள். உடல் எவ்வளவு பலம் பொருந்தியதாக இருந்தாலும் மனம் சோர்ந்து விட்டால் அம்மனிதன் வெற்றி காண இயலாது. பூமியில் இருப்பதும் ,வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே! இருக்குமிடம் எதுவோ , நினைக்குமிடம் பெரிது, போய்வரும் உயரமும் புதுப்பது உலகமும் அவரவர் உள்ளங்களே.என்ற கண்ணதாசன் வரிகள் வாழ்வில் உயர்வதற்கான சாத்தியக்கூறுகளை ஒரு மனிதனின் உள்ளம்தான் உள்ளடக்கி இருக்கிறது என்று கூறுகிறது.
யானையின் பலம் தும்பிக்கையிலே மனிதனின் பலம் நம்பிக்கையிலே’ என்பார்கள். மனம் உறுதியான நம்பிக்கையை பற்றி நிற்குமானால் உடலின் ஒவ்வொரு உறுப்பும் சோர்வகற்றி சுறுசுறுப்பாக செயல்படும் முட்செடிகள் நிறைந்த காடா என்று கேட்டால் இரண்டும்தான். பார்க்கும் பார்வையில் தான் வேறுபாடு உள்ளது. நம்பிக்கையோடு பார்த்தால் பூங்காவனம் நம்பிக்கை இல்லாமல் பார்த்தால் முட்செடிகள் நிறைந்த காடு.
என் விதியின் தலைவன் நானேதான் என்று நம்ப வேண்டும். நம்மை உயர்த்துவதும் தாழ்த்துவதும் யாரோ அல்ல; நாமேதான். மனதிற்கு நல்ல பயிற்சி கொடுத்து ஆக்கபூர்வமான எண்ணங்களையே தாங்கி நிற்க பழக்க வேண்டும்.
“மன நிம்மதி என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்; ஆடம்பரம் எனபது நாமே தேடிக்கொள்ளும் வறுமை என்பார் பேரறிஞர் சாக்ரடீஸ். மனம் தன்னிரக்கம் என்ற வலைக்குள் சிக்கிக் கொண்டால் காயப்பட்டுப் போகின்றது. இந்தக் காயம் ஐம்புலன்களுக்கும் பரவி மனிதரை பலவீனப்படுத்துகிறது. மனம் உறுதிமிக்க பொலிவை அடைந்தால், உடல் உறுப்புகள் செயல்திறம் பெறுகின்றன. இப்போது சொல்லுங்கள், மனதின் சீர்கெட்ட எண்ணங்களால் உடலின் உறுதி தளர்ந்து அழிவை நோக்கிப் போகலாமா அல்லது மனதை வலிமைப்படுத்திக் கொண்டு செயற்கரிய சாதனைகளை செய்து வெற்றி பெறலாமா?

 

திருக்குறளின் அறம்

திருக்குறளின் அறம் நடைமுறை வாழ்க்கையின் உன்னதத்தின் அடிப்படையாகும். இரு வரிகளில் அமைந்ததால் மட்டும் குறளல்ல.!!!!

அணுவைத் துளைத்து ஆழ்கடலைப் புகட்டியதால் மட்டும் குறளல்ல. ஒவ்வொரு அதிகாரத்திலும் பேசப்படும் கருத்தின் முழுமையைப் பத்துக் குறட்பாக்களில் பேசிக்காட்டும் அசாத்தியத்தில் தான் அது குறள்.

அந்தப் பத்துக் குறட்பாக்களில், பேசப்படும் அறக் கருத்து வரையறுக்கப்படும். அதன் அவசியம் விளக்கப்படும், விளைவுகள் சொல்லப்படும், அதாவது அறம் கடைப்பிடிப்பதின் மேன்மையும், அறத்தைக் கடைப்பிடிக்காததின் கீழ்மையும் குறிக்கப்படும். கூர்ந்து நோக்கினால், சில கருத்துக்களை நிறுவுவதற்காகக் காணும் நடைமுறை நிகழ்வுகளைச் சான்றாகக் காட்டும் அனுபவ அணுகுமுறையும் கையாளப்படும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஒவ்வொரு அறக் கருத்தென்னும் வைரத்தின் பன்னிறங்கள் பத்துக் குறட்பாக்களில் பட்டை தீட்டப்பட்டிருக்கும்.
மனம் சார்ந்த அறத்தின் பண்புகளாகக் கடிந்தொழுக வேண்டியவற்றில் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் ஆகிய நான்கும் குறிப்பாகச் சொல்லப்படுன்றன. கடிந்தொழுக வேண்டிய இந்த நான்கு பண்புகளை விரித்துரைக்குமுகமாக அழுக்காறாமை, அவா அறுத்தல், வெகுளாமை, பொறையுடைமை என்ற நான்கு அதிகாரங்கள் அமைகின்றன. ஆக, மொழி, மெய், மனம் சார்ந்த அறங்கள் ஒழுக்கத்தின் அடிப்படையாய் அமைய, இதன் பின்னணியில் ஒழுக்கமுடைமை, கூடா ஒழுக்கம் என்ற இரு அதிகாரங்களையும் இணைந்து வாசிக்கும் போது சில குறள்களின் அர்த்தங்கள் ஆழம் பெறுகின்றன.
எதைக் கருதி மொழி, மெய், மனம் சார்ந்த மேற் சொன்ன அறங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ஒரு மெய்யுணர்தலைக் கருதியே அது இருக்க முடியும் என்ற அளவில் திருக்குறளின் மெய்யுணர்தல் அதிகாரத்தை நாம் எடுத்துக் கொள்ள முடியும். புத்த கோசர் தனது “தூய்மையுறுவதற்கான வழி என்ற நூலில் மூன்று அடிப்படை மாசுக்களைக் குறிப்பிடுகிறார். அவை பேராசை , வெறுப்பு , காமம் என்பவை.

இவை சக்தி, எண்ணெய் போன்று தம்மளவில் மட்டும் மாசானவை அல்ல; மற்றவற்றையும் மாசுடையாக்குபவை என்பார் அவர். புத்த கோசரின் மூன்று அடிப்படை மாசுக்களைப் போலவே, திருக்குறளின் மூன்று அடிப்படை மாசுக்கள்- காமம், வெகுளி, மயக்கம்- மெய்யுணர்தலுக்குத் தடையாக உள்ளன. மயக்கம் என்பதை அறியாமை, அல்லது அகந்தை என்று பொருள் கொண்டால், விருப்பு (காமம்), வெறுப்பு (வெகுளி) என்ற மனம் சார் நிலைகளான் மாசுக்கள் மெய்யுணர்தலுக்குத் தடையாகின்றன. இந்தக் கருத்து ‘யான் எனது என்னும் செருக்கு அறுப்போன் என்று வரும் குறளில் (குறள் 346) மேலும் விளக்கம் பெறுகிறது.

‘தான் இல்லாத உடம்பை யான் என்றும், தன்னோடு இயைபு இல்லாத பொருளை எனது என்றும் கருதி அவற்றின் கண் பற்றுச் செய்வதற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான் என்று பரிமேல் அழகர் உரை விளக்கம் சொல்கிறது. இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் “தான்” என்பது உடல் உபாதைகளால் பாதிக்கப்படாது உடலினின்றும் தனியாய் என்றும் நிலையாய் அனுபூதியாய் ஒளிரும் ஆத்மா என்ற ரீதியில் சொல்லப்படவில்லை. “தான்” “எனது” என்னும் அகந்தை நிலைகளை அகற்றி ஒரு அகண்ட பிரக்ஞையைச் (Cosmic Consciousness) சுட்டுவதாய்த் தான் இருக்கிறது. இந்தக் கட்டத்தில் தவம் அதிகாரத்தில் வரும் ‘தன்னுயிர் தான் அறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் வரும் “தன்னுயிர் தான் அறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும் (குறள் (268) என்ற குறளையும் நினைவு கூர்வது பொருத்தமானது. ஆக, நிலையாமை, தவம், துறவு, மெய்யுணர்தல் என்ற அதிகாரங்களை ஒருங்கு கூடி வாசித்தால் திருக்குறளின் அறத்தின் இலக்கு என்னவென்று புரிந்து கொள்ள உதவும்.

 

 

கவலைகள் கிடக்கட்டும் ! காரியம் நடக்கட்டும் ! துணிந்து நில் !

‘கவலைப்பட்டு உன்னை நீயே அழித்துக் கொள்ளாதே… நொந்து புலம்பாதே…கவலைகளிலிருந்து விடுபடு’ என்றார் பாரதி. கவலைதான் மனிதனுக்கு முதல் எதிரி. எப்பொழுது பார்த்தாலும் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு வீட்டு முகட்டையே விடாமல் முறைத்துப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தால் கவலை தீர்ந்து போய் விடுமா என்ன? ‘ கவலைகளை சாதரணமாக எடுத்துக்கொண்டு அதற்காக கவலை படாமல் கலங்காமல் இருக்க வேண்டும் என்றால் எந்த ஒரு நிகழ்வையும் கடுமையா கவும் எடுத்து கொள்ளகூடாது அதே சமயத்தில் சாதரணமாகவும் எடுத்து கொள்ளகூடாது. இயல்பாக எடுத்து கொள்ள வேண்டும்.வாழ்க்கையில் சிலர் ஏற்றம்,தாழ்வு,கவலைகள் யாருக்குத்தான் இல்லை.எல்லோருக்கும் கவலை இருக்கத்தான் செய்கிறது.பலர் தங்கள் பிரச்சனைகளை – கவலைகளை வாய்விட்டுப் புலம்பி வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.ஆனால் சிலர் தங்கள் கவலைகளை வெளியே காட்டிக் கொள்வதே இல்லை.

துக்கம் உண்டாவது என்பது இயற்க்கை அதற்காக அந்த துக்கத்தையே எப்போதும் நினைத்து கொண்டு இருந்தால் எதிர்காலம் என்னாவது? குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தைகளின் எதிர்காலம் என்னாவது? துக்கத்தை ஒருபக்கம் ஒதுக்கி வைத்து விட்டு அடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யவேண்டும். அதைவிட்டு எப்பொழுதும் துக்கத்தை நினைத்து கொண்டு இருந்தால் கவலைகள் தான் மிஞ்சும். அந்த கவலைகளின் விலைவாக உடல் நலம்தான் கெடும்.கவலை என்பது மனதைக் கொல்லும் ஒரு நோய்.அது அமிலம் போல மனதை மெல்ல மெல்ல அரித்துக் கொல்லும்.
கற்பனையில் இல்லாததை எண்ணி கவலைப்படுபவர்கள் இன்று அதிகமாகி விட்டார்கள்.
“எனக்கு வேலை கிடைக்காவிட்டால்….எனக்குத் திருமணம் நடக்காவிடால்….
என்னைக் காதலிப்பவன் என்னைக் கல்யாணம் செய்யாமல் விட்டு விட்டால்….
எனக்குக் குழந்தை பிறக்காவிட்டால்….”இப்படி வீணான கற்பனைகள் மனதில் அலை அலையாய் எழும்.இதுவே
கவலைகளைக் கருக்கொள்ளச் செய்துவிடும்.

சில பேர் பார்த்தீர்கள் என்றால் எதையாவது ஒரு விஷயத்தை தாங்கி கொள்ள முடியவில்லை என்றால் உடனேயே அழுது விடுவார்கள்.அப்படி அழுகும்போது அவர்கள் மனதில் உள்ள சோகமும் சேர்ந்து அந்த கண்ணீருடன் கரைந்து விடுகிறது. மனதும் அவர்களையும் அறியாமல் காலியாகி விடுகிறது.கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு.காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு”என்பது திரைப்படக் கவிஞரின் உற்சாக வரிகள்.
“கவலைப்படுங்கள்.கண்ணீர் விட்டு அழுங்கள்.ஒரு நாளைக்கு ஐந்து நிமிடங்கள் கவலைப்படவும் அழவும் நேரம் ஒதுக்கினால் போதும்.தனியறையில் கவலைகளை நினைத்து கண்ணிர் வடியுங்கள்.ஆனால் அந்த ஐந்து நிமிடம் முடிந்த பின் கவலைகளை உதறிவிட்டு புதிய மனிதனாக அறையை விட்டு வாருங்கள்.பின் நாள் முழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள்”என்கிறார் ஒரு மேலை நாட்டு அறிஞர் ஒருவர்.

சிலர் கோயிலுக்கு சென்று தங்கள் மனதில் உள்ள குறைகள் சோகங்களை அழுது புலம்பி பிரார்த்தனை செய்வார்கள். அப்படி பிரார்த்தனை செய்யும் போது மனதில் உள்ள குறைகள் அழுகையுடன் சேர்ந்து தன்னாலேயே வெளியேறிவிடும். அதனால் மனதும் வெற்றிடமாகி, என்னுடைய மன பாரத்தை கடவுளிடம் இறக்கி வைத்து விட்டேன். இனி அவர் பார்த்து கொள்வார் என்று ஒரு நிம்மதியுடன் இருப்பார்கள்.

அழுகை என்பது கவலைகளுக்கு உரிய ஒரு அருமையான வடிகாலாகும். தாங்க முடியாத கவலைகளினால் தாக்கப்படும்போது அழுது தீர்த்து விடுவது மிகவும் நல்லது. யாரிடம் அழுவது? அது உங்களுக்கு வேண்டியவர்களாகவும் இருக்கலாம், கோயிலாகவும் இருக்கலாம் அல்லது தனிமையில் உட்கார்ந்து அழுது விடலாம்.

அழுகை என்பது இயற்கையால் கொடுக்கப்பட்ட ஒரு அருமையான சாதனம். அதனை கொண்டு தாங்க முடியாத கவலைகளையும் கவலைகளினால் உண்டாக கூடிய வியாதிகளில் இருந்தும் தப்பிக்கலாம்.

முன்பெல்லாம் இறந்த வீட்டில் அழுகை சத்தம் அந்த உடல் மயானத்திற்கு செல்லும் வரையிலும், அதன் பிறகு குறிப்பிட்ட நாட்கள் வரை அல்லது குறிப்பிட்ட நாட்களில் அதாவது மூன்றாம் நாள், எட்டாம் நாள், முப்பதாவது நாள் என்று ஒப்பாரி வைத்து அழுவார்கள். அப்படி ஒப்பாரி வைத்து அழும்போது இறந்தவரின் சோகம், அவர் மறைவினால் உண்டான கவலைகள் தன்னாலேயே வெளியேறிவிடும்.

இப்போது இறந்த வீட்டில் அழுகை என்பதை பொதுவாக யாரிடமும் பார்க்க முடியவில்லை. ஏன் என்றால் அழுதால் மற்றவர்கள் நம்மை கேவலமாக பார்ப்பார்கள் என்று.

இன்னும் சிலர் பார்த்தீர்கள் என்றால் தங்கள் கவலைகளை யாரிடமாவது சொல்லி புலம்பி கொண்டு இருப்பார்கள். அப்படி புலம்பும்போது அவர்களையும் அறியாமல் அவர்களுடைய மனது இலகுவானது போல உணருவர். ஆனால் மற்றவர்கள் அவரை பார்த்து சரியான புலம்பல் ஆசாமி என்பர் .

கவலைகளை மறக்க அடுத்து ஒரு நல்ல பழக்கம் dairy எழுதுவது. மனதில் உள்ள சோகங்களை, கவலைகளை டைரியில் எழுதும் போது மனதில் உள்ள கவலைகளை தொலைத்துவிட்டது போல ஒரு உணர்வு உண்டாகும். அதனால்தான் பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம் dairy எழுதும் பழக்கத்தை மறக்காமல் வைத்திருந்தனர். எந்த ஒரு விசயத்தையும் அவர்கள் கடுமையாக ஆக எடுத்து கொள்ள மாட்டார்கள். கவலைகளை தொலைப்பதற்கு கோயிலுக்கும் போக மாட்டேன், மற்றவர்களிடம் சொல்லவும் மாட்டேன் என்பவர்களுக்கு தனிமையில் தனக்கு தானே பேசியோ அழுது புலம்பியோ கவலைகளில் இருந்து விடுபடலாம். கவலைகளை கண்டு துவளாமல் இருப்பதற்கு எந்த ஒரு பிரச்சனையையும் சாதரணமாக எடுத்து கொள்வது. அதாவது “take it easy policy” என்ற மன நிலை வேண்டும்.

தியானம் போன்ற கலைகள் ஒருவரை எந்த ஒரு காரியத்திற்கும் கலங்க செய்யாது. எதையும் take it easy policy என்று எடுத்து கொள்ள செய்யும் மனநிலைக்கு தயார் படுத்தி விடும். அப்படி தயார் படுத்தும்போது ஒருவர் இறந்ததினால் உண்டாகும் சோகத்தை கூட, மனிதர்களாக பிறந்தவர்கள் இறந்து தானே ஆக வேண்டும் அல்லது இறந்தவர்களை நினைத்து கவலைபடுவதினால் இறந்தவர்கள் திரும்பி வரப்போவதில்லை என்ற மனத்தெளிவு உண்டாகும்.தியானம் என்பது மனம் சார்ந்த ஒரு கலை என்பதாலும், கவலைகளின் பிறப்பிடம் மனது என்பதனாலும், கவலைகளை களைவதற்கு தியானம் ஒரு அற்புத மருந்தாகும் என்பதில் சந்தேகம் இல்லை

தியானம்

இன்பமும் துன்பமும் புலன்களின் எண்ணங்களே! ஆகையால் புலன்களை, தியானத்தின் மேல் திருப்பினால், இன்பமாக இருக்கலாம் !!

இன்பங்களும் துன்பங்களும் மனிதர்களாக ஏற்படுத்திகொண்ட ஒரு மாயையான சிந்தனையாகும். நடக்கும் நிகழ்ச்சிகள் தனக்கு சாதகமாக இருந்தால் அதை இன்பம் என்றும், பாதகமாக இருந்தால் துன்பம் என்றும் ஒருவர் செயற்கையாக, மனதின் தவறான உந்துதலில் அல்லது மனதின் தவறான சிந்தனையானால் எடுத்து கொள்கிறார்.
எனவே ஒருவர் துன்பம் என்று தன்னை மனதாலும் உடலாலும் கஷ்டபடுத்தி கொள்கிறார் என்றால் அது மனம் சார்ந்த பிரச்னை அல்லது சிந்தனை என்று அடித்து கூறலாம். இந்த மனம் சார்ந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு மனதை சரியாக சிந்திக்க செய்வதுதான்.
தியானத்தின் மூலம் ஒருவர் மூளையினுடைய அலைகளை ஒழுங்கு படுத்தபடுத்தி எது உண்மை, எது போலி என்று சிந்திக்க செய்ய முடியும் . அப்படி சிந்திக்கும்போது அங்கு இன்பம் துன்பம் என்ற மாயைகளுக்கு வேலை இல்லை.
துன்பங்கள் என்று மனிதன் நினைத்து கொண்டு இருக்கும் செயல்கள் எதுவும் நிரந்திரம் அல்ல. அதே போன்று இன்பம் என்று மனிதர்கள் நினைத்து கொண்டு இருக்கும் எந்த செயல்களும் நிரந்திரம் அல்ல. மனது தெளிவாக அல்லது சரியாக சிந்தனை செய்யும்போதுதான்.இதனை நாங்கள் உணருவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. குடும்பத்தில் ஆணும், பெண்ணும் சேர்ந்து ஒத்து சென்றால்தான் குடும்ப வாழ்க்கை பிரகாசிக்கும். இந்த உலகத்தில் பெரும்பாலானோர் பிறக்கும்போதே பணக்காரர் ஆக பிறக்கவில்லை. உண்ணும் உணவுக்கும், உடுக்கும் ஆடைக்கும் வழியே இல்லாமல்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய கடுமையான உழைப்பின் காரணமாகவும் நாமும் இந்த உலகத்தில் முன்னேற முடியும் என்ற நம்பிக்கைதான் அவர்கள் இன்றும் பணக்காரர்களாக இருக்கின்றனர். இன்று தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தை ஒரு பொருட்டாக அல்லது துன்பமாக அவர்கள் எடுத்து கொண்டிருந்தால் அவர்கள் பிற்காலத்தில் பெரிய பணக்காரர் ஆக இருந்திருக்க முடியாது அல்லது இருக்க முடியாது.
துன்பம் என்பது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டது, துன்பம் என்னும் வியாதியை தியானம் என்னும் மருந்து கொண்டுதான் அந்த மருத்துவர் குணபடுத் துவார்.தியானத்தின் மூலம் மனது சரியாக சிந்திக்க முடியும்.
மனது சரியாக சிந்திக்க செய்யும்போது அங்கு இன்பம் துன்பம் என்ற பாகு பாடு இல்லை. இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் இரண்டையுமே ஒரே கண்ணோட்டத்தில் எடுத்துகொள்ளும் மனப்பான்மை வரும். எனவே தேவையில்லாத விருப்பு, வெறுப்பு, எல்லா நிகழ்வுகளையும் சாதரணமாக எடுத்து கொள்ளும் மனப்பான்மை தியானம் செய்வதின் மூலம் வரும் என நம்பலாம்

 

மனிதவளத்தை உயர்த்த வல்லவை !!! பணிவு, கனிவு, துணிவு!!!!!!
கவலையே இல்லாத மனிதர்கள் இல்லை. ஆனாலும் கவலைகளை மறந்து, மகிழ்ச்சியை அனுபவித்து வரும் பலரும் வாழ்ந்து வருகின்றனர்.
பணிவு, கனிவு, துணிவு ஆகியன மனிதவளத்தை உயர்த்த வல்ல பண்புகளாகும். பணிவு என்பது அடிமைத்தனமல்ல. ஒத்துப்போதல் என்ற கருத்தில் சமநிலை நேர்மையாகவே பணிவினைக் கருத வேண்டும். கனிவு என்பது பிறர் விருப்பத்தைக் கருணையோடும் விளைவறிந்த விழிப்போடும் நிறைவேற்றும் இரக்க மனநிலையே தான். துணிவு என்பது தன்னம்பிக்கை. மற்றவர்கள் மீது அன்பு செலுத்தினால், நமது ஆயுள் நீடிக்கும் என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள். மற்றவர்கள் மீது நாம் அளவுக்கு அதிகமான அன்பை செலுத்தும்போது நமது உடலில் உள்ள ஹார்மோன் நமக்கு நல்லஉணர்வுகளை கொடுக்கிறது. ஒவ்வொரு முறையும் நாம் அன்பை வெளிப்படுத்தும் போது ஹார்மோன் பிரச்சினைகள், ரத்த அழுத்தம், மன அழுத்தம் குறைகிறது. ஆரோக்கியமும், மன அமைதியும் அதிகரிக்கிறது.ஒருவர் மீது அன்பு வைத்தால் போதும், தொடர்ந்து நமக்கு அது சந்தோஷத்தை கொடுக்கும். குறிப்பாக தம்பதிகள் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து அன்பை செலுத்தும்போது அதற்கேற்ப குடும்பத்தில் இல்லறம் இனிக்கும். அன்புக்கு எல்லையே இல்லை. நீங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகள் மீது அன்பை செலுத்தும்போது, அந்த பிராணியும் உங்கள் மீது அன்பை வெளிப்படுத்தும். இதனால் நம்முடைய மனது அமைதியாகி, உடல் ஆரோக்கியமாகும். நாம் அடிக்கடி கேட்கும் மனதுக்கு பிடித்த ஒலியின் மூலம் நம்முடைய உடலும், மனதும் உற்சாகமாகும்.மென்மையான ஒலிகள் நம்மை தாலாட்டும்.
நமக்கு எதில் விருப்பம் அதிகம் என்பதை அறிந்து கொண்டு, அதற்கேற்ப விஷயங்களை தேடிச் செல்வது, அதற்கான கருத்துக்களை உள்வாங்கி காதில் போட்டுக் கொள்வது, அது தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடுவது என நம்மை நாம் அறிந்து கொண்டால் மகிழ்ச்சியை அதிகரித்துக் கொள்ளலாம்.சிரிப்பு என்பது நம்முடைய உடம்பு, மனதில் ஏற்படும் வலிகளைப் போக்கும் வலி நிவாரணி. இதுவொரு முகத் தசைகளை அழகாக்கும் அழகியல் காரணி. சிரிப்பதால் இளமை மெருகேறும். சிரிப்பு என்பது நமக்கு மட்டுமின்றி, நம்மை சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷப்படுத்தும் என்பதை மறந்து விடாதீர்கள்

உருவ அருவ வழிபாடுகள்:

தானம், தவம் போன்றவற்றை உயர் நோக்கமின்றி செய்யும் போது அவை அவித்யை ஆகின்றன. அவற்றை அவித்யை வசப்பட்டு செய்பவன் காரிருளில் மூழ்குகிறான். அதாவது அறியாமை வசப்பட்டு மேலும் மேலும் பிறவிகளுக்கு உள்ளாகிறான்.தவம், தானம், ஜபம், சேவை போன்ற சாதனைகள் எதுவும் செய்யாமல் வெறுமனே தியானம் செய்ய முயற்சிப்பவர்கள் வெற்றி பெறுவதில்லை. ஏனெனில் தவம், ஜபம் போன்ற கிரியைகள் மனத்தைத் தூய்மைப் படுத்துகின்றன. ஆற்றலைத் தருகின்றன. தூய்மையின் மூலம் ஆற்றல் பெற்ற மனத்தினால்தான் தியானம் செய முடியும். தவமும் வித்யையுமே ஒரு சாதகனுக்கு முக்கியமான சாதனைகள். தவத்தால் மனத்தின் மாசுகள் அகல்கின்றன. வித்யையால் மோட்சம் பெறுகிறான் என்கிறார் மனு.
‘மரணத்தைக் கடப்பது’ என்றால் மரணத்திற்குக் காரணமான வினைப்பயனிலிருந்து விடுபடுவது. எனவே ஜபம், தவம் போன்ற கிரியைகள் இறைவனை நாடிச் செல்வதால் மனத் தூய்மை பெற்று, தியானத்தால் இறைநிலையை அடைகிறான் என்பது இந்த மந்திரங்களின் கருத்து ஆகும்.

உருவ வழிபாடும் அருவ வழிபாடும் இறைவனை உருவம் உடையவராக வழிபடலாம், உருவமற்றவராகவும் வழிபடலாம். இரண்டையும் இணைத்து செய்தால்தான் மிகவுயர்ந்த பலன் கிடைக்கிறது என்ற உண்மையை எடுத்துக்காட்டுகின்றன இந்த மந்திரங்கள்.
அந்தம் தம: ப்ரவிசந்தி யேஅசம்பூதி உபாஸதே I
ததோ பூத: இவ தே தமோ ய உ சம்பூத்யாக்ம் ரதா: II 12 II
பொருள்: யார் அருவக் கடவுளை வழிபடுகிறார்களோ அவர்கள் காரிருளில் மூழ்குகின்றனர். யார் உருவக் கடவுளை வழிபடுகிறார்களோ அவர்கள் அதை விடக் கொடிய இருளில் உழல்வதைப் போல் துன்புறுகின்றனர். (சனாதன தர்மத்தில் உருவ மற்றும் அருவ இரண்டு விதமான வழிபாடுகளையும் எடுத்துக் கூறும் காரணத்தை இதனால் புரிந்து கொள்ள இயலுமென்று நம்புகிறேன். ஏனென்றால் ஒரு சாதகன் எவ்வளவுதான் முதிர்ச்சி அடைந்தவனாக இருந்தாலும் கூட ஆரம்ப காலத்தில் அருவ வழிபாடை செய்ய முனைந்தால் அவனுக்கு கடும் தோல்வியே கிடைக்கும். அதே போல சாதகன் உருவ வழிபாடை மேற்கொண்டு அதைக் கடக்காமல் அதிலேயே மூழ்கிக் கிடக்கிறானோ அவனும் கூட இருளில் மூழ்கிய நிலைதான் அடைவான். ஏனென்றால் அந்த உருவங்கள் இருக்கும் இடத்தில் மட்டுமே அதாவது ஆலயம் அல்லது பூஜை அறையில் மட்டுமே அவனுக்கு பக்தி உணர்வு உண்டாகும். ஆனால் அருவ வழிபாட்டை மேற்கொள்ளும் ஒருவன் வெறும் மணலைத் தவிர வேறெதுவும் இல்லாத பாலைவனத்தில் இருந்தால் கூட அவனுக்கு அதே இடத்தில் வழிபாடை மேற்கொள்ள இயலும். இதன் தாத்பர்யம் சாதகன் ஆரம்பக் கட்டத்தில் உருவ வழிபாட்டையும் அதன் பின்னர் அருவ வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டுமென்பதுதான். இதை இன்னமும் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திப் பார்த்தால் ஐந்தாம் வகுப்பில் உள்ள கணக்குப் பாடத்தைப் படித்து முடித்த பின்னர்தான் ஒருத்தன் கணிதத்தில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ள இயலும் என்றும் கூறலாம். உருவ வழிபாடு அடிப்படை. அருவ வழிபாடு அதன் விரிந்த நிலை.)

மேலும் வாசிக்க

மறைந்த பாடகர், திரு எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

மறைந்த பாடகர், பாடலாசிரியர் திரு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு டென்மார்க் சைவத்தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையின் ஆழ்ந்த வருத்தத்தையும் இறுதி அஞ்சலியையும் …