பேச்சுப்போட்டிகள் 2019
பாலர்பிரிவு
தமிழ்மொழி
திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர் ஆவார். உலக இலக்கிய அரங்கில் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த உன்னதப் படைப்பாளி அவர். பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் ‘குறள்’ என்றும் அதன் உயர்வு கருதி ‘திரு’ என்ற அடைமொழியுடன் ‘திருக்குறள்’ என்றும் பெயர் பெறுகிறது.
தன் அறிவாலும் மற்றும் சிந்தனையாலும் அவர் எழுதிய திருக்குறள், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாக மாறி தமிழர்களுக்குப் பெருமையைத் தேடித் தந்திருக்கிறது. இந்நூல், சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க் கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. மேலும் வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளது. திருக்குறளை உலகப் பொது மறை, முப்பால், ஈரடி, உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்கின்றனர். இந்த நூலிலே அறம் பொருள் இன்பம் வீடு என்பன பற்றி அழகாக மக்களுக்கு உபதேசித்துள்ளார் திருவள்ளுவப் பெருந்தகை. ஆயிரத்து முன்நூற்று முப்பது குறள்களையும் நூற்றி முப்பத்துமூன்று அதிகாரங்களாகத் தொகுத்துத் தலைப்பிட்டு வழங்கியுள்ளார்.
“வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து
வான் புகழ் கொண்ட தமிழ்நாடு”
என்ற நமது பூர்வீக புகழுக்கு காரணம் திருவள்ளுவர். அவர் மறைந்தாலும், அவர் படைத்த திருக்குறள் என்னும் உன்னத நூல், எக்கால மனிதர்களுக்கும் ஓர் வழிகாட்டியாக இருந்து தமிழர்களின் புகழை உலகளவில் ஓங்கச் செய்கிறது. மாணவர்களாகிய நாமும் திருக்குறளைப் படிப்போம். வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்வோம்.
தர்மம் தலை காக்கும்
தர்மம் தலை காக்கும் என்பது மூத்தோர் வாக்கு. நாம் செய்யும் தான தர்மங்கள் எம்மை என்றும் காத்து வாழ வைக்கும் என்பது இதன் கருத்து. ஆம் எமக்குக் கிடைக்கும் செல்வங்களில் ஒரு பகுதியை நாம் இல்லாதவர்களுக்குக் கொடுக்கவென ஒதுக்க வேண்டும். எமது தேவைகளில் அத்தியாவசியமானவற்றை நிச்சயமாகப் பூர்த்தி செய்யத்தான் வேண்டும். ஆனால் எமது ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டு அத்தியாவசியமான தேவைகளைக்கூடப் பூர்த்தி செய்ய முடியாது தவிக்கும் எமது சமூக அங்கத்தவர்களுக்கு நாம் வழங்க வேண்டும்.
முடிந்தவரை உணவு தானம், துணிகள் தானம், புத்தகங்கள் தானம் செய்யலாம். சிலவேளைகளில் சக மனிதர்களுக்கு நல்ல ஞானத்தை அருள்வதும் தானமாக தான் போற்றப்படும். எப்போதும் மனிதர்களை நேசிக்கவேண்டும். உயர்வு தாழ்வு பாராமல் எல்லோருடனும் சகஜமாகப் பழகவேண்டும். ’மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்பதற்கு ஒப்ப, நாம் மக்களுக்கு நல்ல தர்மங்களைப் புகட்டுவதை சேவையாக செய்யவேண்டும். யாரைப் பார்த்தாலும் கையெடுத்து நெஞ்சத்திற்கு நேராக வைத்து கும்பிட்டு வணக்கம் என்று சொல்லவேண்டும்
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பாய் என்ற ஓரு வாக்குண்டு. ஏழைகளுக்கு உதவி அவர்கள் மனதார எம்மை வாழ்த்துவதை விட மேலான வாழ்த்து வேறெதுவும் இல்லை. ஏழைகள் பசியால் வாடும்போது நாம் நம் வயிறார உண்டபின் அது சீரணமான மேலும் பழம் உண்ணுதல் நன்றா?. நாம் உண்ணத்தான் வேண்டும். உடுக்கத்தான் வேண்டும். ஆயினும் எம்மைப் போன்ற பலர் இப்போது பசியால் துடித்துக் கொண்டிருப்பதையும் உணர வேண்டும். சமூகத்தின் அங்கத்தவர் என்ற வகையில் அவர்களது பசியாற்ற நாம் என்ன செய்ய முடியுமெனச் சிந்தித்துச் செயற்பட வேண்டும். தனக்கு மிஞ்சித்தான் தானம் என்பர். அது சரியானதுதான். எனவே எமது அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து பின் ஏனையோருக்கு உதவுதல் வேண்டும். சிலர் அதை மறந்து உள்ளது யாவற்றையும் பிறருக்கு வழங்கி விடுவதுண்டு. ஆனால் அது வரவேற்கத் தக்கதல்ல. காரணம் நாளை நம்தேவை எப்படிப் பூர்த்தியாகும் என்பதையும் சற்றுச் சிந்திக்க வேண்டும்.
எனவே எம்மால் குறைக்கக் கூடிய கட்டுப்படுத்தக் கூடிய தேவையற்ற செலவுகளை, விரயங்களைக் குறைத்துப் பிறருக்கு வழங்க வேண்டும். இல்லாதவருக்கு வழங்குவது என்பது வங்கியில் சேமிப்புச் செய்வது போன்றது. பிறிதொரு நேரம் எமது ஆபத்தின்போது நாம் செய்த தானங்களும் தர்மங்களும் வேறு ஓர் உருவில் வந்து எம்மைக் காக்கும். எனவே சிறு வயதிலிருந்தே நாம் இந்த நற்செயலைப் பழகிக் கொள்வோமாக.
“இல்லையென்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பாய்” என்ற பாரதியாரின் கனவு நனவாக நடப்போமாக.
நன்றி வணக்கம்.