முகப்பு / விசேட பதிவுகள் / பேச்சுப்போட்டிகள் 28-10-2018

பேச்சுப்போட்டிகள் 28-10-2018

பேச்சுப்போட்டிகள் 2018

பாலர்பிரிவு

விநாயகர்

வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும். நாம் எந்தக் காரியத்தையும் விநாயகரை வணங்கி விட்டுத்தான் ஆரம்பிக்கின்றோம். ஒரு கடிதம் எழுதும்போது பிள்ளையார் சுழி போட்டுத்தான் தொடங்குகின்றோம். பிள்ளையார் சுழி என்பது ஓம் என்ற மந்திரத்தின் சுருக்கம். அதை “உ” என்று போட்டு எழுதுகின்றோம். பிள்ளையாரை நினைத்து எக்காரியத்தையும் ஆரம்பிப்பது சைவமரபு.
கணபதி ஞானத்தின் திருவுருவம். அதனால் அவர் நம்மை எப்பொழுதும்  நல்வழியில் நடத்துவார். தவறுகள் ஏற்படாமல் பாரத்துக் கொள்வார். ஆகையால் நாம் நல்வழியில் காரிய சித்தி ஏற்பட முதலில் அவருடைய அருளை நாடுகின்றோம்.
விநாயகரின் தோற்றம் வித்தியாசனமானது. அவருக்கு யானை முகமும் பேழை வயிறும் உண்டு. பேழை வயிறு இருப்பதன் பொருள் எல்லா உலகங்களையும் தன்னுள் அடக்கியவர் என்பதாகும். அவருக்கு ஐந்து கரங்கள் இருப்பதால் ஐங்கரன் என்றும் அழைக்கபப்டுகின்றார்.
ஒரு கரத்திலே பாசம் இருக்கிறது. அது படைத்தலைக் குறிக்கிறது. இன்னொரு கையில் அங்குசம் இருக்கின்றது. அது அழிக்கும் தொழிலைக் குறிக்கின்றது. மற்றையது அபயக்கரம் ஆகும். அது பக்தர்களைக் காப்பாற்றும். வேறொரு கையில் மோதகம் உள்ளது. தன்னை வணங்குபவர்களின் பாவ புண்ணியஙக்ளுக்கேற்ப அந்தக் கை அருள் கொடுக்கும். தும்பிக்கை நீளமானது எங்கு என்ன நடந்தாலும் அதைத் தட்டிக்கேட்கும் வல்லமை உள்ளது.
விநாயகரின் வாகனம் எலியாகும். விநாயகரைப்  பலவகை மலர்களாலும் இலைகளாலும் அர்ச்சித்து வழிபடலாம். அவற்றுள் முக்கியமாளது அறுகம்புல்லாகும். இந்த அறுகம்புல்தான் விநாயகருக்கு மிகவும் விருபப்மானது. வுpநாயகரை வணங்கும்போது தலையிலே குட்டி தோப்புக்கரணம் போடுவது மரபாகும். அறுகம்புல் நாயகரான விநாயகரை வழிபட்டுச் சகல சௌபாக்கியங்களையும் பெற்றுய்வோமாக.

கீழ்ப்பிரிவு
வழிபாடு – வாழ்வு – ஆசாரம்.

 

நாம் சிவபெருமானை வழிபடும் சைவர்கள். எங்கள் முழுமுதற் கடவுள் சிவன். விநாயகர் சுப்பிரமணியர் வைரவர் வீரபத்திரர் உமையம்மை இவர்கள் சிவ மூர்த்தங்கள். சிவனுடைய இந்த மூர்த்தங்களும் சைவசமயத்தவரின் வழிபாட்டிற்குரியவையே. சிவனையும் சிவமூர்த்தங்களையும் நம் வழிபடு தெய்வங்களாக கொள்ள முடியும். சிவனை மட்டும் தான் வழிபடவேண்டிய நிலையிலுள்ள நாம் சிவமூர்த்தங்களிலும் சிவனைக்காணும் முறைமையால் அவற்றையும் வழிபடுகின்றோம்.
சைவமக்களுக்கென்று ஒரு வாழ்வியல் உண்டு. அவர்களுக்கென்று ஒரு பண்பாடு உண்டு. அவர்களுக்கென்று ஒரு கோலம் உண்டு. பார்த்த பார்வையிலே ஒருவன் சைவனா? அல்லது சைவன் அல்லாதவனா? என்று கண்டுகொள்ள முடியும். அந்த அளவிற்கு சைவம் வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்து கிடக்கின்றது. சைவசமயத்தவரின் வாழ்வியலுடன் சம்பந்தப்பட்ட எல்லாக் கருமங்களும் சைவசமய வாழ்வுடன் தொடர்புடையவைதான். காலைக்கடன்களை நிறைவுசெய்தல் வீட்டினை வீட்டுச் சூழலைத் துப்புரவு செய்தல் புனிதப்படுத்தல் அலங்காரங்கள் செய்தல் தன்னைப் புனிதமாக்குதல் வழிபாட்டு முயற்சிகளில் ஈடுபடல் வருவாய்க்குரிய முயற்சிகளைச் செய்தல் என்பன எல்லாம் சைவசமய வாழ்வியலின் அடித்தளத்திலிருந்து எழுவது தெரிகின்றது. ஏன் மூடநம்பிக்கை என்று சொல்லப்படும் விடயங்கள் கூட ஆராய்ந்து பார்த்தால் அதற்குள் சைவத்தின் வாழ்வியல் புரியும்.
இந்த வாழ்வியல் முறையைப் புரிய வைப்பது சேக்கிழார் தந்த பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணம் அப் பெரியபுராணத்திலுள்ள நாயன்மார்களது வரலாறு இந்தக்கருமங்களை இலகுவாக்கி விளங்க வைக்கின்றன. சைவவாழ்வு என்பது இதுதான் என்று நாயன்மார்களது வாழ்வுமுறை எமக்குச் சொல்லி நிற்கின்றன. காலையில் நாங்கள் எழுகின்ற போதோ எழுந்தபின் இருக்கின்ற போதோ சிவசிவா என்று சொல்லிக்  கொள்ளுவோம் அல்லது முருகா என்று சொல்லுவோம். இந்த உபயோகங்கள் எல்லாம் எம்மை அறியாமலேயே நிகழ்பவை. ஆனால் அவையெல்லாம் இறைவனுடனானவை.
சைவ ஆசாரம் அது என்ன? பலர் பேசியதைக் கேட்டிருக்கின்றோம்தான் புதிதாக ஒன்றும் இல்லை. எமது நாளாந்த வாழ்க்கையில் நாம் கைக்கொள்பவைதான். ஓழுக்கம் ஓழுங்கு சுத்தம் புனிதம் முதலான எல்லாம் ஓன்றாகி நிற்பதொரு நிலைதான் அது எனலாம். சைவ ஆசாரத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதும் நாயன்மாரது வாழ்க்கை முறைதான். அவர்கள் வாழ்வு ஓழுங்கானது ஒழுக்கத்துடனானது சுத்தமானது புனிதமானது தூய்மையானது அதேவேளை நேரியது. இவற்றை போற்றுவதன் மூலம் நாமும் ஆசார சீலர்களாகலாம்.
நாம் மேலைத்தேய நாடுகளில் வாழ்ந்தாலும் சைவ ஆசாரத்தை பின்பற்றி வாழ்ந்தால் எமது வாழ்வு உயரியதாகவும் மன நிம்மதி நிறைந்ததாகவும் அமையும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.
சைவ சமய முறைப்படி எப்போதும் நடக்கமுடியாதவர்கள் வாரத்தில் ஓரிருநாட்களையாவது ஒதுக்கி விரததினங்களை கடைப்பிடித்து அன்றைய நாட்களை தங்கள் குழந்தைகளுடன் முழுமனதாக ஆசார நாளாக வழிபாட்டு நாளாக பின்பற்றிவருவதன் ஊடாக இங்குள்ள எதிர் காச்சந்ததியினருக்கு ஒரு உந்துதலாக வழிகாட்டுதலாக அமையும் என்பதில் நாம் மனநிறைவடையலாம்.
நன்றி வணக்கம்.

மத்தியபிரிவு 
செய்ந்நன்றி அறிதல்.
‘காலத்தினால் செய்த நன்றி சிறிதேனும்
ஞாலத்தின் மாணப் பெரிது’
ஒருவருக்கு உதவி தேவைப்படும் போது நாம் செய்யும் உதவியானது சிறிய அளவினதாக இருந்தாலும் அது இந்த உலகத்தை விட பெரியது என்னும் அளவிற்கு மதித்தல் உயரிய பண்பாகும் என்கின்றார் திருவள்ளுவப்பெருமான்.
மனிதர்கள் யாவருமே பிறரில் தங்கி வாழ்பவர்களாகவும் பிறரைத் தாங்கி வாழ வேண்டியவர்களாகவும் உள்ளனர். இதனால் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வது என்பது தவிர்க்க முடியாததாகின்றது. இதனாலேயே சைவமக்கள் அன்று முதல் இன்றுவரை செய்நன்றி என்னும் நற்பண்பை உயிர்போல் போற்றி வருகின்றனர். செய்நன்றி மறத்தலால் ஏற்படும் தீயவிளைவுகளைக் கந்தபுராணம் அழகாக எடுத்துக்காட்டுகின்றது. அசுரர்களான சூரபன்மரும் அவனது தம்பிமார்களும் சிவபெருமானிடம் ஆயிரத்தெட்டு அண்டங்களை நூற்றெட்டு யுககாலம் ஆட்சி புரியவும் எவராலும் தம்மை அழிக்க முடியாத வச்சிரயாக்கையையும் பெற்றனர். பல்வேறு ஆற்றல்களையும் பெற்று தமக்கு ஒப்பாரும் மிக்காருமின்றித் திகழ்ந்தனர். காலம் போகப் போக மிதமிஞ்சிய செருக்கையடைந்தனர். சிவபெருமான் செய்த பேருதவியை மறந்தனர். ஆணவத்தின் வடிவமாக மாறினர்.
இறுமாப்புக்கொண்ட இவர்கள் நல்லவர்களை வருத்தினர். தேவர்களும் முனிவர்களும் தம்மை அசுரர்களிடமிருந்து காப்பாற்றுமாறு சிவபெருமானை வேண்டினர். சிவபெருமான் தேவர்களைக் காக்க திருவுளங் கொண்டார். இதன் பொருட்டு தோற்றுவிக்கப்பட்டவரே முருகப்பெருமான். சரவணப்பொய்கையிலே தோன்றி கார்த்திகைப்பெண்களின் வளர்ப்பிலே நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து  சூரபன்மனுடன் போர் நிகழ்த்தினார். முருகப்பெருமானின் உக்கிர போரிலே அசுரர்கள் அனைத்தையும் இழந்தனர். தேவர்கள் தம்மைக்காப்பாற்றிய முருகப்பெருமானுக்கு நன்றி செலுத்தினர் இந்த கந்தபுராணக்கதையானது சூரன் செய்நன்றி மறந்ததினால் அடைந்த பெரும் கேட்டினை உலகமாந்தர்க்கு எடுத்துக்காட்டுகின்றது.
அண்டசராசரங்களையும் உயிரினங்களையும் படைத்துக் காத்துவரும் இறைவனுக்கு யாவரும் நன்றி உடையவர்களாக இருத்தல் வேண்டும். சைவநெறியில் நின்று நற்பண்புகள் நல்லொழுக்கம் பேணி வாழ்வதே இறைவனுக்குச் செய்யும் நன்றியாகும். தாய் தந்தையர் கைம்மாறு கருதாமல் எவ்வளவோ நலன்களை தம் பிள்ளைகளுக்குச் செய்கின்றனர். அதனாலேயே அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வங்களாகப் போற்றப்படுகின்றனர். அவர்கள் சொற்கேட்டு அவர்களுக்குப் பணிந்து உதவிகள் செய்வதே பிள்ளைகள் அவர்களுக்கு செலுத்தும் நன்றிக்கடனாகும்.  கல்வியை வழங்கி அறிவுக்கண்ணை திறக்க உதவுபவர் ஆசிரியர். அவரை மதித்து மரியாதை செய்தல் மாணவரின் கடனாகும்.
‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்நி கொன்ற மகர்க்கு’
‘நன்றி மறப்பது நன்றன்று நன்று அல்லது
அன்றே மறப்பது நன்று’
நன்றி வணக்கம்.
மேற்பிரிவு 
ஸ்ரீலஸ்ரீ றுமுகநாவலர்.
சைவசமயத்திற்கும் தமிழ்மொழிக்கும் அரும்பெரும் பணியாற்றிய சைவத்தமிழ்ப் பெருமகனார் ஆறுமுகநாவலர் ஆவர். இவர் 1822 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 18 ம் திகதி யாழ்ப்பாணத்து நல்லூரிலே பிறந்தார்.இவரின் தந்தையார் பெயர் கந்தப்பிள்ளை தாயார் பெயர் சிவகாமி அம்மையார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் ஆறுமுகம். தமிழ்நாட்டின் புகழ்மிக்க சைவ ஆதீனமாக விளங்கிய திருவாவடுதுறை ஆதீனம் இவரின் சைவத் தமிழ்ப் பணிகளைப் பாராட்டி ‘நாவலர்’ பட்டம் வழங்கிக் கௌரவித்தது. அன்று முதல் ஆறுமுகநாவலர் என அழைக்கப்படலானார்.
ஆறுமுகநாவலர் வாழ்ந்து பணியாற்றிய காலம்இ இலங்கையையும் இந்தியாவையும் ஆங்கிலேயர் அரசாட்சி செய்த காலம். மேற்கத்தைய கலாச்சாரம் ஆங்கிலக்கல்வி முறை வேற்றுமதச் செல்வாக்கு என்பன அப்பொழுது மக்களிடையே பரவியிருந்தன. அதேவேளை தமிழ்மொழி சைவமரபுக்கல்வி சைவத்தமிழ்க்கலாச்சாரம் என்பன சிறப்பிழந்த நிலையிற் காணப்பட்டன. ஆறுமுகநாவலர் வாழ்ந்த இந்தக்காலச் சூழ்நிலையே சைவசமயத்தையும் தமிழையும் வளர்ப்பதற்கு அவரைத்தூண்டியது. சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதற்காக அவர் செய்த தியாகங்கள் அளப்பெரியன.
நாவலர் இளமைப்பருவத்திலேயே கல்வி அறிவு ஒழுக்கங்களிற் சிறந்து விளங்கினார். சிவபத்தி நிறைந்தவராகவும் சைவ ஆசார சீலங்களை வாழ்க்கையில் இம்மியளவும் தவறவிடாது கடைப்பிடிப்பவராகவும் திகழ்ந்தார். சைவசமயச் சூழலில் சைவப்பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்பதை உணர்ந்த நாவலர் வண்ணார் பண்ணையிலும் சிதம்பரத்திலும் சைவப்பிரகாச வித்தியாசாலை என்ற பெயரில் பாடசாலைகளை நிறுவினார்.
சைவப் பிள்ளைகள் கற்பதற்கு ஏற்ற சமய நூல்களையும் தானே எழுதிப் பதிப்பித்து வெளியிட்டார். யாழ்ப்பாணத்திலும் சென்னையிலும் அச்சுகூடங்களை வித்தியாபாலன் அச்சு இயந்திரசாலை என்னும் பெயரில் நிறுவினார். ஏட்டுச்சுவடிகளாக இருந்த பழைய சைவநூல்கள் தமிழ் இலக்கண இலக்கியநூல்கள் சிலவற்றையும் தாமே பரிசோதித்து அழியாமற் பாதுகாத்தார். சைவசமயத்திற்கும் பண்பாட்டிற்கும் எதிராக அக்காலத்தில் எழுந்த செயற்பாடுகளுக்கெல்லாம் நாவலர் தகுந்த பதில் அளித்தார். சைவத்தை விட்டு பிறமதம் புகுந்தோரிற் பலர் சைவசமயத்தின் உண்மையை உணர்ந்து மீண்டும் சைவசமயத்துக்கு வந்ததுடன் அதனை இறுகப்பற்றவும் வழி பிறந்தது. சைவமும் தமிழும் காப்பாற்றப்பட்டன. ஆறுமுக நாவலர் சமயத்தொண்டுடன் கஞ்சித் தொட்டித்தருமம் போன்ற சமூகப்பணிகளிலும் ஈடுபட்டார். வரலாற்றுப் புகழ்மிக்க கீரிமலைச் சிவன்கோயில் திருக்கேதீச்சரம் என்பவற்றின் மூர்த்தி தல தீர்த்தச் சிறப்புக்களை வெளிப்படுத்தியதுடன் அவற்றின் புனருத்தாரணப் பணிகளுக்கும் முன்னின்று உழைத்தார்.
1872 ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் தாம் அதுவரை பெற்ற அனபவத்தால் அறிந்த உண்மைகளைத்திரட்டி எழுதி அதற்கு யாழ்ப்பாணச் சமயநிலை எனப் பெயர் தந்து வெளியிட்டார். 1875 க்கும் 1878 க்கும் இடைப்பட்ட காலத்தில் நன்னூல் விருத்தியுரை நைடதவுரை மூன்றாம்அனுட்டானவிதி குருசிசிய கிரமம் தருப்பணவிதி போசனவிதி தமிழ் அகராதி தமிழ்ஆங்கிலஅகராதி முதலிய நூல்களை எழுதுவதிலும் சைவப்பிரசங்கங்கள் செய்வதிலும் தனது நாட்களை செலவுசெய்தார்.
ஐந்தாங்குரவர் எனப் போற்றப்பட்ட ஆறுமுகநாவலர் 1879 ஆம் ஆண்டு கார்த்திகை மாத மக நட்சத்திரத்தில் இறைவனடி சேர்ந்தார். சைவத்தையும் தமிழையும் இரு கண்கள் போல் போற்றி வாழ்ந்த ஆறுமுகநாவலர் முத்தியடைந்த தினத்தில் அவர் பொருட்டுக்  குருபூசைகள்  இன்றும் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன.
‘நல்லை நகர் ஆறுமுகநாவலர் பிறந்திரலேற்
சொல்லு தமிழெங்கே சுருதியெங்கே
எல்லவரும் ஏத்து புராணாகமங்க ளெங்கே
பிரசங்கமெங்கே.’ ——- நன்றி வணக்கம்

மேலும் வாசிக்க

பண்ணிசை போட்டிகள் 2018

டென்மார்க்  சைவ தமிழ் பண்பாட்டுப் பேரவையின் 11 வது ஆண்டுவிழாவை முன்னிட்ட பண்ணிசை, பொது அறிவு மற்றும் பேச்சுத்திறன் போட்டிகள் 2018   …