பாவ இருள்
உன் அருள் ஆழி
ஒரு பூச்சியாய் மிதக்கிறேன்
நான்
உன் மன்னிப்பு ஒளி
ஒதுங்கி
மறைகிறது
என் இருள்
இமைக் கதவு திறந்து
மூடும் வரை
என் வாசல் நுழைகின்றன
பாவ ஈசல்கள்
நன்மைக் கழுத்தில்
மூடச் சங்கிலி போட்டுக் கட்டிய பின்தான்
காரியங்களுக்குக் கொடுக்கிறேன்
சுவாசம்
ஒரு விளக்காய்
என்னை ஏற்றினாய்
வந்து அணைத்து விடுகிறது
இருட்காற்று
என்
பாவ ஆறு வற்றிப்போக
தேவை
ஒரு கோடை
வாழ்க்கை
வீசுகி்றது வலை
சிக்குகின்றன
பாவ மீன்கள்
ஓட முடியாமல்
முடமாய் நிற்கிறது
நன்மைக் குதிரை
பெய்கிறது பாவ மழை
சிந்தனைக் குடை இருந்தும்
மனமில்லை
விரித்துப் பிடிக்க
இறைவா
ஒரே ஒரு
வாளித் தண்ணீர் தா
என் முற்றத்து அழுக்கு
நான் கழுவிட
வேண்டும்
ஒரு மண்வெட்டி
மனதுக்குள்
தேங்கி நிற்கும் சாக்கடைக்கு
ஓர்
ஓடை உண்டாக்க .
நூறு அறிவு
இறை நினைவு ஒரு துளி உயிரில் நிரம்பும் போது
சமுத்திரமாகிறது ஆனந்தம்
பக்தி விளக்கேற்று இறந்துவிடும்
சூரியனுக்கு விலகாத இருளும்
இறை oஞாபகம் தொலைப்பதால்தான்
மரணிக்கிறது நிம்மதி
சந்ததி செல்லும் அளவிற்கு விசாலமாகிறது ஒற்றையடிப் பாதை
உன்னிடம் நன்மை விளையுமெனில்
ஆடை அணியும் முன்னமே உடுத்துகிறாய் ஆசை
பின் புலம்புகிறாய் நிம்மதி இல்லையென
இறை நாமம் துறந்து சுவாசிக்கும் போது
காற்றுக் கூட உன்னைச் சுட்டெரிக்கும் நெருப்பாகி
பாவங்களால் வாழ்க்கை அமைத்தபின்
விழுகிறாய் வேரில்லா மரமாக
ஒரு கோடி ரூபா செலவு போல சிந்த மறுக்கிறாய்
ஒரு சொட்டு அன்பு
மிகச் சிறந்த நம்பிக்கை இறை பயம்
அது இருப்பின் சாய்க்கும் எவ்வகைத் துன்பங்களையும்
வர்ணமென எண்ணிப் பூசுகிறாய் கரி
வாழ்க்கை முகத்திற்கு
உன்னைக் கண்டால் தானாகத் திறக்க வேண்டும்
மூடிய ஆலயங்களும்
ஆடைகள் மட்டும் வெள்ளை
மனது கடுமையான கறுப்பு
ஆசைகளுக்குப் புன்னகை விற்றபின்
காசு இல்லை என்கிறாய் சந்தோசம் வாங்க
துளி நீ
கடல் குடிக்க விரும்பிச் சாகுகிறாய் மூழ்கி
அன்புக்குள் நிம்மதி ஒளிந்திருக்கிறது
தேடித் தேடி அலைகிறாய் ஆசைக்குள்
அமைதிக்குள் அழகு வசிப்பது புரியாமல்
இடியாகி விழுகிறாய் வாழ்க்கை மடிக்குள்
நூறு அறிவு உள்ளவனாகிலும்
பூஜ்யம் நீ இறை ஞானம் இல்லையேல்.