முகப்பு / Ikke kategoriseret / பேச்சுத்திறன் போட்டி – 10-09-2017

பேச்சுத்திறன் போட்டி – 10-09-2017

 பேச்சுத்திறன் போட்டி – சம்பந்தர் பிரிவு

தலைப்பு: பூச இனியது நீறு 

பாண்டிய மன்னனுக்கு ஒருமுறை கொடிய வெப்பு நோய் ஏற்பட்டது உடனே பாண்டிமா தேவியாராகிய மங்கையற்கரசியாரும்  மந்திரியார் குலச்சிறையும் திருஞான சம்பந்தரை வரும்படி வேண்டினர். அவரும் அரசனிடம் வந்தார். மந்திமாவதுநீறு வானவர் மேலதுநீறு என்னும் பாடலைப்பாடி தனது கையால்  திருநீறு கொண்டு  வேந்தனின் உடலைத் தடவினார். வெப்பம் இருந்த இடம் தெரியாது நீங்கிற்று வேந்தனும் உய்ந்தான். இப்படியான சம்பவங்களால் திருநீற்றின் மகிமையும் அதற்கு நாம் கொடுக்கும் மதிப்பும் விளங்குகின்றது

வீபூதியை காலையிலும் மாலையிலும் நீராடிய பின்னும் போசனத்துக்கு முன்னும்  நித்திரைக்கு முன்னும், அவசியம் தரித்தல் வேண்டும். கனவு கண்டு எழுந்தவுடனும் மனம் குழப்பமுறும் வேளைகளிலும். சிவ சிவா என கூறி திருநீறு பூசினால் மன அமைதி உண்டாகும். பெரியவர்களிடத்திலோ ஆலயங்ககளிலோ திருநீறு வாங்கும் போது அவர்களை முதலில் வணங்கி வலது கரத்தை மேல்வைத்து இடதுகரத்தை கீழ்வைத்து இருகரங்களாலும் பயபக்தியுடன் பெற்றுக்கொள்ளல் வேண்டும். வாங்கிய திருநீற்றை தந்தவருக்கு எதிர்முகமாக  அண்ணார்ந்து நின்றபடி சிவ சிவா எனக்கூறியவாறு நிலத்திலே சிந்தவிடாது நெற்றியில் பூசவேண்டும். எஞ்சிய வீபூதியை ஒருநாளும் வாயினால் ஊதக் கூடாது.  எப்படியாவது உடலில் பூசுவதே சிறந்த வழியாகும்

நன்றி வணக்கம்.

 

 பேச்சுத்திறன் போட்டி – அப்பர் பிரிவு
கீழ்ப்பிரிவு

தலைப்பு: பாடல் பெற்ற திருக்கேதீஸ்வரம் 

திருக்கேதீஸ்வரம் மன்னார் மாவட்டத்தில், மாதோட்டம் நகரில் பாலாவி தீர்த்தக்கரையில் அமைந்துள்ளது. இத்தலம் நாயன்மார்களான திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார் போன்றவர்களால் பாடல் பெற்றதுடன்  மூர்த்தி தீர்த்தம் என்ற விசேட சிறப்பு அம்சங்களையும்  கொண்ட திருத்தலமுமாகும். இங்குள்ள இறைவனின் பெயர் கேதீஸ்வரநாதர். ஆதிக்குடிகளான நாகர்களினால் வழிபடப்பெற்றதனால் நாகநாதர் எனவும் அழைக்கப்படுவார். இறைவி பெயர் கௌரியம்மை.  தீர்த்தம், பாலாவி, விருட்சம் வன்னிமரம்  போன்ற மகிமைகள் இத் தலத்திற்கு உண்டு.

இவ் ஆலயத்தை இராவணனின் மாமனாகிய “மயன்” என்பவனே நிர்மாணித்தான் .இராமர் இராவணனை வென்று அயோத்திக்கு செல்லும் வழியில் கேதீஸ்வர பெருமானை தரிசித்து சென்றார் என்றும், அர்ச்சுனன் தீர்த்தயாத்திரையின் பொருட்டு இலங்கை வந்தபோது கேதீஸ்வரரை வழிபட்டு சென்றான் என்றும் வரலாறு கூறுகின்றது. போர்த்துகேயர், ஒல்லாந்தர் காலத்தில் இவ் ஆலயம் முற்றாக அழிக்கப்பட்டது. பின்னர் ஆலயத்தினை திரு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். புராதான கோவில் இருந்த இடம் 1894 ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. திருவாளர்கள் சிவபாதசுந்தரம், திரு சேர் கந்தையா வைத்தியநாதன் ஆகியோர் புனர் நிர்மாணப்பணிக்கு அருந்தொண்டு ஆற்றினர்.

இப்போதுள்ள ஆலயம்  1903 ம் ஆண்டு ஆனிமாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். வருடாந்த மகோத்சவம் வைகாசி மாதத்தில் நடைபெறும். தேர்த்திருவிழாவன்று ஐந்து  இரதங்கள் பவனிக்கு வரும் . இவை இந்திய  சிற்பக்கலை வல்லுனர்களால் அழகுற அமைக்கப்பட்டவை ஆகும். மாசி மாத சிவராத்திரி விரதம் சிறப்பாக இங்கே அனுஸ்டிக்கப் படுகின்றது. கேதீஸ்வரநாதரை வணங்குவதினால் அடியார்கள் பெரும் பயன் பற்றி சுந்தரமூர்த்தி நாயனார் தனது தேவார பதிகத்தில் பாடியுள்ளார் .

நன்றி வணக்கம்.

 பேச்சுத்திறன் போட்டி – சுந்தரர் பிரிவு

மத்தியபிரிவு

தலைப்பு:  தொண்டும் தானமும் 

 

தொண்டும் தானமும்

திருநாவுக்கரசு சுவாமிகள் கையில் எப்போதும் உழவாரத்துடன் வலம் வருவார் . எந்த ஆலயத்திற்கு சென்றாலும் தன் கையில் உள்ள  உழவாரத்தினால்  ஆலயத்தை  சுற்றியுள்ள இடங்களை  சுத்தம் செய்து அழகு படுத்துவார் .இது அவரின் பெரும் தொண்டாகும்.

அப்பூதியடிகள் என்ற அடியவர் ஒருவர் இருந்தார் . அவர் எல்லா இடங்களிலும் தண்ணீர் பந்தல்களை அமைத்தார் .களைத்து வரும் மக்களின் தாகத்தினைத் தீர்த்து பெரும் தொண்டாற்றினார் . கிராமப்புறங்களில்  இத் தொண்டு மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் பயன்படும் வகையில் மக்களால்  இப்போதும்  முன்னெடுக்கப்படுகின்றது. இது ஒரு அரிய பணியாகும்.

இங்கே ஒரு கதையை சொல்லலாம் என நினைக்கிறேன். தானம் என்ற பெயரில் இந்த கதையைச்  சொன்னது ஒரு கீரி.

ஒரு வீட்டில் ஒரு அந்தணரும், மகனும் வசித்து வந்தார்கள் . அவர்கள் மிகவும் ஏழைகள். பக்கத்தில் உள்ள வயலில் சூடடித்த பின்னர் கொட்டிக்கிடக்கும் நெல்மணிகளை அவர்கள் பொறுக்கி வந்து வீட்டில் கொடுப்பார்கள் .அதை அவரின் மனைவியும்,மருமகளும் துப்பரவு செய்து   நனைய வைத்து மாவாக்கி அப்பம் சுட்டு கொடுப்பார்கள் .

ஒவ்வொரு நாளும்  இப்படியே இவர்களின் உணவுப் பரிமாறல் நடந்தது. மருமகள் எப்படியாவது  ஒருவருக்கு தலா ஒரு அப்பமாக நான்கு அப்பத்தினை சுட்டுவிடுவார் .அவற்றை தினமும் ஆண்டவனுக்கு நிவேதனம் செய்துவிட்டு, மாமாவுக்கு ஒரு அப்பமும், மாமிக்கு ஒரு அப்பமும், அப்புறம் கணவருக்கு ஒரு அப்பமும் கொடுத்துவிட்டு மீதி ஒன்றினை  தான் உண்பார் . இதுவே அவர்களின் நாளாந்த வழக்கமாயிற்று .

ஒருநாள் அந்த உணவு நேரத்தில் அவர்கள் வீட்டின்முன் வாடிய முகத்துடன் ஒரு வயோதிபர் நின்றார் .அவர் வாடிய முகத்தின் காரணம், பசி என்பதை புரிந்துகொண்ட  அந்தணர், வயோதிபரை உள்ளே அழைத்து, உட்கார வைத்து, தனக்கான ஒரு அப்பத்தை கொடுத்து சாப்பிட வைத்தார் . வயோதிபரின் பசி தீர்ந்த பாடில்லை. எனவே தனது மனைவியாரின் பாகமான ஒரு அப்பத்தினை தந்து  உண்ணுமாறு பணித்தார். வயோதிபரின் முகத்திலோ இன்னும் திருப்தி இல்லை . இதை புரிந்துகொண்ட  மருமகள் தனக்கும் கணவருக்கும் வைத்திருந்த மீதி இரு அப்பங்களையும் வழங்கி முதியவரின் பசியைத் தீர்த்து அவரை மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர் .

அந்த நால்வரும் அன்று பூராக பட்டினியால் வாடியபோதிலும்,  முதியவரின் பசி தீர்த்த மகிழ்வில்  ஆனந்தம்  அடைந்தார்கள் . இவ்வண்ணம் கதை சொன்ன கீரி தொடர்ந்து சொல்லிற்று…

நான் இந்த காட்சியை பார்த்துக்கொண்டே இருந்தேன். அப்பம் செய்த மா  அவ்விடத்தே கொட்டிக்கிடந்தது. நான் அந்த மாவில் புரண்டேன். என்ன ஆச்சரியம் ..எனது உடலில் பாதி பொன்னிறமானது. எனது உடலின் மறுபாதியும்  பொன்னிறமாக மாற வேண்டுமென்று ஆசை எனக்கு ஏற்பட்டது. உடனே கோவில் யாகமண்டபத்தில் வந்து புரண்டேன். ஆனால் அந்த ஆசை கைகூடவில்லை. இந்த பெரிய யாகமண்டபத்தை விட  அந்த ஏழைகள் செய்த தானம் எவ்வளவு பெரியது என நான் புரிந்துகொண்டேன் என்று சொல்லியபடி கீரி ஓடிச் சென்றது.

எனவே மனிதர்களாகிய நாங்கள் எல்லோரும் அடுத்தவர் பசி தீர்ப்பதில்  ஆனந்தம் காண்போம். மற்றோர் துயர் துடைத்து மகிழ்ச்சியாக வாழ்வோம்.  எமக்கென வாழாது பிறர்க்கென வாழும் உயரிய உன்னத நிலைக்கு  எம்மை உயர்த்திக் கொள்வோம் .

நன்றி வணக்கம்.

 

 பேச்சுத்திறன் போட்டி – மணிவாசகர் பிரிவு

தலைப்பு: அர்த்த நாரீஸ்வர வடிவம்


அர்த்தநாரீஸ்வர வடிவம் என்பது சிவனுடைய மகேஸ்வர மூர்த்தங்களில் ஒன்றாகும். அர்த்த நாரீஸ்வர் என்றால் சிவன் பாதி பெண்ணாக உடையவர் என்று அர்த்தமாகும். சிவன் சக்தியின் ஐக்கிய நிலையை பிரதிபலித்து, இறைவனை ஆணும் பெண்ணும் சமபாதி என உணர்த்தும் வடிவமாகும்.

அர்த்த நாரீஸ்வரர் மூர்த்தம் பற்றிய கதை ஒன்றினை இங்கு நோக்குவோம். சிவன் உமாதேவி சகிதம் கைலாயத்தில் இருந்தபோது தேவர்கள், முனிவர்கள் அட்டதிக்கு பாலகர்கள் அனைவரும் வலம் வந்து வணங்கினர் அப்போது அங்குவந்த பிருங்கி முனிவர் தேவியுடன் இருந்த சிவனை வலம் வந்து வணங்கவில்லை. ஏன் எனில் அவர் ஒரே பரம்பொருளான சிவனை மட்டுமே வழிபடுவதாக உறுதி பூண்டிருந்தார். எனவே சிவனுடைய அனுக்கிரக சக்தியால் சிவனை மட்டுமே வலம் வந்து வணங்கி நின்றார். உமையை வலம் வரவில்லை. அதனைக்கண்டு கோபமடைந்த உமை பிருங்கி முனிவருக்கு சக்தியை வழங்கும் தசைக் குருதி அகன்று வெறும் எலும்பு தோலுடன் இயங்குவதற்கு கூடச் சக்தியின்றிப் போக சாபமிட்டார்.

பிருங்கி முனிவரின் அந்த உருவத்தைக் கண்ட இறைவன் அவர்மீது கருணை கொண்டார.; அந்த எலும்புருவை தாங்தி நிற்க மூன்றாவது காலைக் கொடுத்தருளினார். முனிவர் அது கண்டு ஆனந்தக் கூத்தாடினார். அந்த நிழ்ச்சியால் வேதனையடைந்த உமை கையிலையை விட்டு நீங்கி பூவுலகம் வந்து. கௌதவ முனிவரின் ஆச்சிரமத்தில் இருந்த வில்வமரத்தின் கீழ் இருந்தார். உமை கௌதவ முனிவரிடம் தான் பூலோகத்துக்கு வந்த விடயத்தைக்கூறி. நானும் நாயகனும் ஒன்றாக இருப்பின் வழிபடும் போது தனித்தனியே வணங்கும் நிலை இருக்காது அல்லவா என்று கூறி அதற்கோர் உபாயம் கேட்டார்.  கௌதவமுனிவரும் தாயே தேவரீர் திருவுளக் கருத்து இலகுவாக நிறைவேறக் கேதாரகொரி விரதம் இருக்கிறது. அவ்விரதத்தை அனுஸ்டித்தால் தாங்கள் விரும்பும் வரம் பெறலாம். அது மட்டுமின்றி பூவுலகில் மானிடரும் அவ்விரதத்தை அனுஸ்டித்து தாங்கள் விரும்பும் வரங்களை பெறலாம் எனக்கூறினார். அவ்வழியே உமையும் கௌரிவிரதம் இருந்து அதன் மூலம் சிவனுடன் இணைந்து கொள்ள. சிவன் அர்தநாரீஸ்வர் வடிவம் பெற்றார் என்பர்.

அர்த நாரீஸ்வர மூர்த்தம் பிருங்கி முனிவரின் உறுதியை சோதிப்பதாக அமைந்தது அதனை அறிந்த முனிவர் வண்டின் உருவில் இருவருக்கும் இடையே புகுந்து சிவனை மட்டும் வலம் வந்து வழிபட்டார் எனவும் அந்த உறுதிப்பாட்டைக் கண்ட உமை முனிவருக்கு நல்வரம் வழங்கினார் எனவும் கதை உண்டு. அர்த்த நாரீஸ்வரருக்கும் இம்மூர்த்தத்தின் ஜடாமகுடத்துடன் கூடிய தலையில் பிறைச் சந்திரன் இருக்கும். வலது காதில் நகர்குண்டலமோ, சர்ப்பகுண்டலமோ தொங்கும். இடது புறத்தில் மேற்கையில் நீலோற்பலமலர் இருக்கும். வலது புறத்திலுள்ள ஆடை தொடை மட்டத்தில் இருக்கும். மார்பில் சிவனின் விதிக்கப்பட்ட அணிகலன்களுடனும் இடுப்பில் நாக மேகலையும் விளங்கும். வலது கால் வளைந்தோ நேராகவோ அமைந்திருக்கும். இவ் வடிவத்தில் இடது புறத்தில் பார்வதி தேவிக்குரிய மகுடம் விளங்கும். வலது பக்கத்தில் பெண்ணுக்குரிய வண்ணம் தீட்டப்பட்டு இருக்கும்.

இடது காதில் வாளிகாவகைக் குண்டலம் தொங்கும். இடது புற மார்பகத்தில் மேல் பெண்கள் அணியும் அணிகலன்கள் மிளிரும். பட்டாடைகள் கணைக் கால்வரை அமைவதோடு பாதசலங்கையும் காணப்படும். பின்புறம் அல்லது பக்கவாட்டில் இடபம் காணப்படும். அர்தநாரீஸ்வர மூர்த்தம் சக்தியை இறைவனில் இருந்து பிரிக்க முடியாது என்ற தத்துவத்தின் சிறப்பைக் கொண்டது இம்மூர்த்தம். ஆலயங்களில் சிற்பமாகவும் ஓவியங்களாகவும் இடம் பெற்றுள்ளது. இதன் சிறப்பினை அபிராமிப்பட்டர் உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து இங்கு எம்மையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார் என்று போற்றி பாடியுள்ளார்

நன்றி வணக்கம் 

மேலும் வாசிக்க

பண்ணிசை, மற்றும் போட்டித் திகதி: 10-09-2017

எமது பண்ணிசை, பேச்சு மற்றும் தேவாரப்போட்டிகள் 10-09-2017 ஞாயிற்றுக்கிழமை வயிலை நகரில் பின்வரும் பாடசாலையில் நடைபெறும் என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம். Hældagerskolen …