முகப்பு / FrontPicture / கண்ணிலே அன்பிருந்தால்… சுவாமி பரமானந்தர்

கண்ணிலே அன்பிருந்தால்… சுவாமி பரமானந்தர்

கண்ணிலே அன்பிருந்தால்… கல்லிலே தெய்வம் வரும்!

மார்ச் 15,2016,14:36 IS

* உள்ளத்தில் மகிழ்ச்சி இருந்தால் உதட்டில் இனிய வார்த்தைகள் வெளிப்படும். கண்ணிலே அன்பு நிறைந்திருந்தால் கற்சிலையில் தெய்வம் அருள்புரிவதைத் தரிசித்து மகிழலாம்.
* முழுமையான அன்பு, அறிவு, ஆற்றல் நிறைந்த பரம்பொருளின் அம்சமாக நீங்கள் இருக்கிறீர்கள். உலக உயிர்களுக்கெல்லாம் இயன்ற
நற்பணிகளைச் செய்யுங்கள்.
* தளர்ச்சி, வருத்தம், சந்தேகம் போன்ற கீழான எண்ணங்களுக்கு சிறிதும் இடம் கொடுக்காதீர்கள். மனம் என்னும் மாளிகையின் மூலை முடுக்கெல்லாம் அன்பு, அமைதி, பொறுமை போன்ற நற்குணங்களை நிறையுங்கள்.
* ஒருமுகப்பட்ட மனதுடன் எந்த செயலில் ஈடுபட்டாலும் மகிழ்ச்சி, வெற்றி ஆகியவற்றை அடைய முடியும். ஆனால் மனக்கட்டுப்பாடு இல்லாவிட்டால் எதையும் சாதிக்க முடியாது.
* ஒரு நாளிலோ அல்லது தற்செயல் நிகழ்வாகவோ மன உறுதியை உங்களால் அடைய முடியாது. முறையான பயிற்சியும், விடா முயற்சியும் இருந்தால் மட்டுமே மனதை சீர்படுத்த முடியும்.
* எந்த நிலையிலும் மற்றவருடைய உதவியை எதிர்பார்ப்பது கூடாது. சொந்தக் கால்களில் நின்று பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பவனே சிறந்த வெற்றியாளனாகத் திகழ்வான்.
* தூய்மையான மனம் மனிதனை சுதந்திரமாக வாழ வைக்கும். கட்டுப்பாடற்ற நிலையில் இருக்கும் தூய்மையற்ற மனமோ மனிதனை அடிமையாக்கி விடும்.
* உறவினர், நண்பர்கள் செய்யும் உதவியை விட ஒருவனுக்கு அதிகமான உதவிகளை மனம் செய்து விடும். அதனால் புத்தியுள்ளவர்கள் மனதைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
* போர் வீரன் எதிரியிடம் இருந்து தன்னைப் பாதுகாக்க மார்புக் கவசத்தை நம்புவதைப் போல, நெறிப்படுத்தப்பட்ட மனம் என்னும் கவசம் புலன்கள் என்னும் திருடர்களிடம் இருந்து மனிதனைக் காப்பாற்றும்.
* மனம் அலை பாயும் தன்மை கொண்டது. அதன் வேகத்தை தணியச் செய்து தியானத்தில் ஈடுபடுத்த வேண்டும். கடவுளின் திருவடியை மட்டும் சிந்தித்தால் மனம் புனிதமடைந்து எல்லையில்லா இன்பம் பெறும்.
* “கடவுளின் அன்பு என் மூலமாக வெளிப்படும் விதத்தில் செயல்படுவேன். எப்போதும் திறந்த மனநிலையோடு இருப்பேன்” என்று
உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொண்டு அன்றாடப் பணிகளைத் தொடங்குங்கள்.
* வாழ்வில் எந்த சூழ்நிலையிலும் வருத்தப்படக் கூடாது. “எந்த பிரச்னை குறுக்கிட்டாலும் அவற்றை முறியடிக்கும் பலம் எனக்கு இருக்கிறது” என்று தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்.
* பிறர் அவமதிக்கும் போதும், உங்கள் மீது தவறு சுமத்தும் போதும் கடவுள் உங்களுக்கு பணிவு, பொறுமை, சகிப்புத்தன்மை என்னும் உயர்ந்த பாடங்களை கற்பிக்கிறார் என்று உணருங்கள்.
* கடவுளுடைய தீர்ப்பில் எந்த தவறும் இருக்காது என்ற உண்மையை உணருங்கள். யாரையும் எந்த சூழ்நிலையிலும் குறை சொல்லும் எண்ணம் உண்டாகாது.
* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள். நற்செயல்களில் மட்டும் ஈடுபடுங்கள். உங்களுக்கு மட்டுமில்லாமல் உங்களைச் சார்ந்த மற்றவர்களுக்கும் உதவிக் கரம் நீட்டுங்கள்.

மேலும் வாசிக்க

பொன்னண்ணா ஓராண்டு நினைவு

எமது டென்மார்க் சைவத்தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையின் ஸ்தாபகர் அன்புக்குரிய கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் #ஓராண்டு நினைவுதினம் நாளை 26-07-2019 …