.jpg)

இம்மூன்று சக்திகளையும் முறைப்படி வணங்கி வீரம், செல்வம், கல்வி பெற உரிய காலமே இந்த நவ இரவுகளாகும். இம் மூன்று தேவியர்க்கும் மூலமாக இருப்பவள் அன்னை பராசக்தி. இவளே உலகில் உள்ள சக்திகளுக்கெல்லாம் ஊற்றாக விளங்குபவள். அன்னை பராசக்தி பல நாமங்கள், ரூபங்களைக் கொண்டவள்.
பராசக்தியின் ஒரு அம்சமான அன்னை அபிராமியின் உபாசகராகிய அபிராமிப்பட்டர் சக்தி பற்றிய சைவ சித்தாந்தக் கருத்துக்களை நோக்குமிடத்து இவள் சிவனில் நின்றும் வேறு படாதவள் என்கின்றார். தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத்தரும்சக்தி பின்னமிலான் எங்கள் பிரான் என்பது உமாபதி சிவாச்சாரியார் கூற்றாகும். சிவமும் சக்தியும் சேர்ந்த வடிவமே அர்த்த நாரீஸ்வர வடிவமாகும் சைவர்களுடைய கருத்தின்படி இறைவன் ஞான வடிவினனாக தியானத்தில் வீற்றிருக்க அன்னை சக்தியே உயிர்கள் மேல் கொண்டு கருணை காரணமாக அகிலாண்டேஸ்வரியாக அணுக எளியவளாக நின்று இயங்குகின்றாள். உமாதேவி சக்தியின் ஒரு அம்சமே. சக்தியை முழு முதலாகக் கொண்ட சமயம் சாக்தமாகும். வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்த சிந்து வெளி நாகரிக காலத்திலே பெண் தெய்வ வழிபாடு இருந்துள்ளமைக்குச் சான்றுகள் உள. சிந்து வெளியிலுள்ள பெரிய இரு நகரங்களான ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் இடம்பெற்ற அகழ்வாராய்ச்சிகளின் போது மண்ணாலான பெண் தெய்வப் பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சேர். ஜோன் மார்ஷல் தனது ஆராய்சித் திரட்டுகளில் குறிப்பிட்டுள்ளார். இருக்கு வேதத்தில் இராக்திரி, உஷை ஆகிய பெண் தெய்வங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. சக்தி தத்துவம் பற்றி சுவேதாஸ்வதர உப நிடதம் கூறியுள்ளது. புராணங்களும் சக்தியின் பெருமை பற்றிக் கூறியுள்ளன. சக்தியின் பெருமை சக்திக்குரிய விரதங்கள், காயத்திரி கவசம், காயத்திரி சகஸ்ரநாமம், சாக்த ஆகமங்கள், சாக்த மதக் கொள்கைகள், பற்றி தேவி பாகவதம் கூறுகின்றது. சங்க இலக்கியத்தில் சக்தி கொற்றவை என்றழைக்கப்படுகின்றாள்.
வட இந்தியாவில் நவராத்திரி விழாவை “”தசரா” என்றழைப்பர். புரட்டாதி மாதத்தில் தேவி பூசை செய்து ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம், தேவி சூக்தம், துர்க்கை சூக்தம் போன்ற தோத்திரப் பாடல்களை பாடி வழிபாடு செய்வர். இவர்களது பூசையில் யந்திர பூசை, சக்கர பூசை முக்கியம் வாய்ந்தவை, இப் பூசையில் அதிக முக்கியத்துவம் பெண் பாலாருக்கு அளிக்கப்படுகின்றது. பெண் இம்சை, உடன் கட்டை ஏறல், பெண் மிருகங்களைப் பலியிடுதல் முதலியன விலக்கப்படுகின்றன.
இந்தியாவில் காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி ஆகியன வெகு சிறப்பு வாய்ந்த சக்தி தலங்களாகும். எமது நாட்டில் நயினை நாகபூஷணி அம்மன், மாத்தளை முத்துமாரி அம்மன், நல்லூர் வீரமாகாளி அம்மன், கொழும்பு பத்திரகாளி அம்மன் கோயில்கள் குறிப்பிடத்தக்கவை. நவ இரவுகளின் போது துர்க்கா, இலக்குமி, சரஸ்வதி வழிபாடு நிறைவு பெற்றதும் 10 ஆம் நாள் விஜயதசமி என்றும் “மானம்பூ’ என்றும் அழைக்கப்படும் விழா கொண்டாடப் பெற்று வருகின்றது தேவியால் மகிடாசுர சங்காரம் நடந்த விழாவைச் சித்திரிக்க, அன்றைய தினம், வன்னி மரம் அல்லது வாழை மரத்தை ஆலய முன்றலில் நாட்டி, அதனை மகிடாசுரனாகப் பாவனை செய்து அம் மரத்தை அம்பாள் வெட்டி வீழ்த்தும் முகமாக விழா எடுக்கப்படும். காட்டெருமை வடிவினனான மகிடாசுரன் தேவர்களைத் துன்புறுத்தியதோடு, மனிதர்களுக்கும் இன்னல்கள் பல புரிந்தவன். அவனை தேவி அழித்தொழித்ததன் தத்துவமும் ஒன்றுண்டு. ஆன்மாக்களைப் பீடித்துள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் அறியாமை, மிருகத்தனம் ஆகிய துர்க்குணங்களையும் சக்தியை வழிபடுதலால் நீக்கிக் கொள்ளலாம் என்பதே இதன் தத்துவமாகும். விஜயதசமிக்கு முதல் நாள் ஆயுத பூசை இடம்பெறும். அன்று இரவு நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களைத் தேவி பாதத்தில் சமர்ப்பித்துப் பூசை செய்து ஆசி பெற்று அடுத்தநாட் காலை அதனை உபயோகத்திற்கு எடுத்துக்கொள்ளுதல் மரபாகும்.
மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் தங்கள் புத்தகங்கள், எழுதுகோல்கள், கோவைகள் முதலியவற்றையும் தொழிலாளர்கள் தமது தொழிற் கருவிகளையும் கலைஞர்கள் தங்கள் இசைக் கருவிகளையும் தேவியின் பாதத்தில் சமர்ப்பித்து வழிபாடு செய்தல் மரபு. இவற்றைச் செய்ய வேண்டியது அவசியமுமாகும்.
விஜயதசமியின் அடுத்த சிறப்பு அன்றைய தினம் சிறுவர், சிறுமியர்களுக்கு ஏடு தொடக்குதல் ஆகும். இதனை வித்தியாரம்பம் என்போம். புதிய கடைகள், ஸ்தாபனங்கள் ஆகியவற்றை ஆரம்பிப்பதற்கும் இந்நாள் மிகப்பொருத்தமான பொன்னாள் ஆகும். இந்த வகையில் மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகிய தேவியரே நவராத்திரி நாயகியர் ஆவர். இத் தேவியரை நவராத்திரி காலத்தில் மனமாரத் தியானித்து நாவாரப்பாடி, உளமாரப் போற்றி வழிபட்டு முறையே வீரத்தையும், செல்வத்தையும், கல்வியையும் பெற்று உய்வோமாக.