இவருக்கு ஒரு முகம், நான்கு கைகள். குரு பகவான் ஒரு பரிபூரண சுபர் ஆவார். நவக்கிரகங்களில் “பொன்னவன்’ என்று போற்றப்படும் குரு பகவான், ஜாதகத்தில் உள்ள தோஷங்களைத் தன் பார்வை மற்றும் சேர்க்கையால் நிவர்த்தி செய்கிறார். இவர் இருக்கும் இடத்தைவிட, பார்க்கும் இடங்கள் சுபிட்சமடையும். இதனால்தான் குரு பகவானின் பார்வையை, “”குரு பார்க்க கோடி பாப நிவர்த்தி” என்கிறோம். பிரம்மதேவரின் மானஸ புத்திரர்களில் ஒருவரும், சப்தரிஷிகளில் ஒருவருமான ஆங்கீரஸ முனிவருக்கும், விசுதா தேவிக்கும் 7வது புத்திரனாகப் பிறந்தவர் குரு பகவான். அனைத்து சாஸ்திரங்களையும் கற்றுத் தெளிந்தவர்.
தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் குருவானவர். தங்கத்தை ஆபரணமாகக் கொண்டவர். அனைத்துப் புத்தி தத்துவங்களுக்கும் காரணகர்த்தா இவரே. சட்டம், மருத்துவம், பொருளாதாரம், நிர்வாகம் ஆகியவற்றில் முக்கியத்துவம் பெற வைப்பவர். நம் அறியாமை என்கிற இருட்டை விரட்டி, அறிவு ஒளியை ஏற்றுபவர். அறிவைப் புகட்டி, வறுமையை ஓடச் செய்து தன் காரகத்துவமான தனத் தைக் கொடுப்பவர். ஆலயங்களில் தென் திசை நோக்கி, தென்முகக் கடவுளாகக் காட்சி தருபவர் ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆவார். சிவபெருமானின் குரு வடிவமே தட்சிணாமூர்த்தியாகும். தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தடியில் அமர்ந்து சநகர், சநந்தனர், சநாதனர் மற்றும் சனற்குமாரர் முதலியோருக்கு மௌன நிலையிலிருந்து ஐயங்களை நீக்கி, ஞானத்தை அருள்கிறார். இதில் குருவாகிய தட்சிணாமூர்த்தி யௌவனம் (இளமை) உள்ளவராக இருப்பார், பாடம் கற்கும் ரிஷிகள் முதியவர்களாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. குரு பகவானின் அதிதேவதையாக ஸ்ரீதட்சிணாமூர்த்தி திகழ்வதால் குரு பகவானையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் வணங்கி வர, கல்வி-கேள்வி ஞானம் உண்டாகும். திரண்ட செல்வமும் கிடைக்கும்.
குரு பகவானின் அனுக்கிரகத்தாலேயே மாந்தர்களுக்கு திருமணம், புத்திரம், பேரன், பேத்தி பிறத்தல், இளமையில் நற்கல்வி, நல்ல உத்தியோகம், வயோதிகத்தில் அமைதியான வாழ்வு ஆகியவை கிடைக்கின்றன. பலமான குரு பகவான் பெண் குழந்தைகளை நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்து, அவர்களால் குடும்ப கௌரவத்தை உயர்த்துவார். குருபகவான் ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய ஐந்து ஸ்தானங்களில் சஞ்சரித்தால், சிறப்புகளைக் கூடுதலாக வழங்குவார். மற்ற ராசிகளில் சஞ்சரிக்க, பார்வை பலத்தால் மட்டுமே நலன்களைச் செய்யக் கூடியவராகிறார். இவர் மிதுனம், கன்னி, தனுசு, மீனம் லக்னக்காரர்களுக்கு கேந்திர ஸ்தானங்களில் தனித்து இருந்தால் கேந்திராதிபத்ய தோஷத்தை அடைந்து, அந்தப் பாவங்களால் உண்டாகும் நன்மைகளைக் குறைத்துவிடுகிறார்.
மேலும் சுக்கிர பகவானைப் போலவே குரு பகவானும் களத்ர ஸ்தானமான ஏழாம் வீட்டில் தனித்து இருக்கும்போது, மணவாழ்க்கையில் சுகத்தைக் கொடுப்பதில்லை. அதற்குப் பரிகாரமாக குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, இருவருக்கும் கருப்புக் கொண்டைக் கடலை மாலை சாற்றி, மஞ்சள் பூக்களால் அர்ச்சித்து, நெய் தீபமேற்றி வழிபட்டு வர, சம தோஷமுள்ள சம்பந்தத்தை உண்டாக்கித் தருவார். மேலும் குரு ஸ்தலமாகக் கருதப்படும் திருச்செந்தூர் செந்திலாண்டவனை வணங்கி வர, குரு பகவானால் உண்டாகும் தோஷங்கள் பறந்தோடிவிடும். ஏனெனில் குரு பகவான் திருச்செந்தூரில் உறையும் செந்திலாண்டவரை வணங்கி நலம் பெற்றார் என்பது உண்மை.
குரு பகவானால் கிடைக்கும் யோகங்கள்
குரு பகவானுக்குக் கேந்திர ஸ்தானங்களான 1, 4, 7, 10ல் செவ்வாய் பகவான் இருந்தால் குரு மங்கள யோகம் உண்டாகும். இதனால் ஜாதகருக்கு பூமி, உணவகம், போலீஸ், ராணுவம் ஆகிய துறைகளில் வெற்றி உண்டாகும். குரு பகவானுடன் சூரிய பகவான் இணைந்தோ, அல்லது அவரைப் பார்த்தோ இருந்தால் சிவராஜ யோகம் உண்டாகிறது. இவர்களுக்கு அரசியலில் வெற்றி, நிர்வாகத் திறமை, முதன்மைப் பதவி ஆகியவை கிடைக்கும். குரு பகவானுக்கு திரிகோண ஸ்தானங்களான 1, 5, 9 ஆகிய இடங்களில் சந்திர பகவான் இருந்தால், குரு சந்திரயோகம் உண்டாகும். இந்த யோகத்தினால் ஜாதகர் ஒரு துறையில் சில காலம் இருந்து, பின்னர் படிப்புக்குச் சம்பந்தமில்லாத துறையில் பிற்காலத்தில் ஈடுபட்டு பெரிய வெற்றிகளைக் காண்பார்கள்.
கஜகேசரி யோகம் :
குரு பகவானுக்கு 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் சந்திர பகவான் இருப்பதால் இந்த யோகம் ஏற்படும். இந்த யோகத்தைக் கொண்டவர்கள் தங்களது ஜாதகத்தில் உள்ள மற்ற குறைகள் நீங்கப் பெற்று, எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவார்கள்.
ஹம்ஸ யோகம் :
குரு பகவான் கேந்திர ஸ்தானங்களான 1, 4, 7, 10ல் ஆட்சி மற்றும் உச்சம் பெற்று இருப்பதால் உண்டாவது. இது பஞ்ச மஹா புருஷ யோகங்களில் ஒன்று. இதனால் எவருக்கும் தலை வணங்காத தலைமைப் பதவி கிடைக்கும். செல்வம், செல்வாக்குடன் நீண்ட ஆயுள் உண்டாகும். குரு பகவானும், சனி பகவானும் ஒருவர் ஜாதகத்தில் இணைந்திருந்தாலோ அல்லது சம சப்தமப் பார்வை செய்தாலோ ஜாதகர் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். தொழில் மற்றும் உத்யோகத்தில் எல்லாவித சுகங்களையும் அவர் அனுபவிப்பார். ஜாதகர் கேட்காமலேயே பல வித உதவிகள் கிடைக்கும்; ஜாதகருக்கு உதவி செய்யப் பலரும் காத்துக் கொண்டிருப்பார்கள். ஜாதகருக்குச் சமுதாயத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். ஜாதகரின் வாக்குக்கு எல்லோரும் கட்டுப்பட்டு நடப்பார்கள்.
by: Sothi/sivasiva.dk