பிரதோஷ விரதம்

தேய்பிறை, வளர்பிறை என இரண்டு பக்ஷங்களிலும் வரும் அமாவாசை, பௌர்ணமி இரண்டிற்கும் பிறகு வரும் பதின்மூன்றாம் நாளிலே இப்பிரதோஷ விரதம் அனுட்டிக்கப்படுகின்றது. இவ்விரதம் மாலை நேரத்திற்குரியது. சூரிய அஸ்தமனத்திற்கு முன்னுள்ள மூன்றேமுக்கால் நாளிகையும் சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னுள்ள மூன்றேமுக்கால் நாளிகையும் (பிற்பகல் நாலரை மணியிலிருந்து இரவு ஏழரை மணிவரை ) பிரதோஷகாலம் எனப்படும். இந்நேரத்தில் சிவபெருமானை வணங்கி வழிபட வேண்டும். இவ்விரத காலத்தில் அன்றாடக் கடமைகளைச் செய்து, பகல் உணவு கொள்ளாமல் நீராடி மாலை வழிபாடுகளைச் செய்து சிவாலயம் சென்று பிரதோஷகாலப் பூசையைத் தரிசிக்க வேண்டும்.

பிரதோஷ காலத்தில் நந்தி தேவரின் கொம்புகளின் ஊடாக சிவதரிசனம் செய்து பிறகு சோமசூத்திரப் பிரதக்ஷிணம் செய்ய வேண்டும். ” சோமசூத்திரப் பிரதக்ஷிணம்” என்னும் வழிபாட்டு முறை என்பது முதலில் இடபதேவரை வணங்கி, இடமாகச் சென்று சண்டேஸ்வரரைத் தரிசித்து, பின் திரும்பி வந்து இடபதேவரை வணங்கி,  வலப்பக்கமாகக் கோமுகை (பசுவின் முகம் போன்று செய்யப்பட்ட தீர்த்தம் விழும் பகுதி)வரை சென்று, மீண்டும் திரும்பி வந்து இடபதேவரை வணங்கி, மறுபடியும் இடமாகச் சென்று, சண்டேஸ்வரரை வணங்கி,   இடபதேவரை இம்முறை தரிசியாது  வலமாகக் கோமுகைவரை சென்று திரும்பி, இடபதேவரைத் தரிசியாமல் இடமாகச் சென்று,  சண்டேஸ்வரரை வணங்கிப், பின் திரும்பி வந்து இடபதேவரைத் தரிசித்து, அவரது  இரு கொம்புகளின் ஊடாக சிவலிங்கப் பெருமானை வணங்க வேண்டும் என்னும் விதிக்கமைய வழிபடுதலாகும். கோமுகையைக் கடவாது திருக்கோவில் வலம்வரும் இந்த  சோமசூத்திரப் பிரதக்ஷிணம் பிரதோஷகால வழிபாட்டில் மிகச் சிறப்பிடம் பெறுகின்றது.

பிரதோஷ காலத்தில் நந்தியம் பெருமானுக்குச் செய்யும் “காப்பரிசி”  நிவேதனம் சிறப்பானது. பச்சரிசியையும், பயற்றம் பருப்பையும் நீரில் நன்கு ஊறவைத்து வடிகட்டி அத்துடன் வெல்லமும்,
தேங்காய்ப்பூவும் சேர்த்துச் செய்வதாகும். பிரதோஷ கால உணவாக இக்காப்பரிசியையோ அல்லது சர்க்கரைப் பொங்கலையோ சாப்பிடலாம். பிரதோஷ காலத்தில் வீண் வார்த்தை பேசாது மௌனமாகத் தியானம் செய்தல் வேண்டும்.

சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை என்ற இம்மாதங்களுள் வரும் சனிப்பிரதோஷத்தில் (பிரதோஷம் சனிக்கிமையில் வரும்போது) விரதத்தை ஆரம்பித்து ஒரு வருடம் முறையாகக் கடைப்பிடித்துப் பின்னர் பூர்த்தி செய்தல் வேண்டும். தொடர்ந்து கடைப்பிடிக்க விரும்புவோர் விரதத்தைத் தொடரலாம். ஆனால் ஒவ்வொரு வருடமும் விரத உத்தியாபனம் செய்தல் வேண்டும். இவ்விரதத்தைக் கைக்கொள்ளுவோருக்குக் கடன், வறுமை, நோய் அவமிருத்து, பயம், மரணவேதனை நீங்கும்.

”இரண நல்குர(வு), இரும்பாவம், இரும்பசி,  உரோகம்
அரணறும் பயம், கிலேசம், கேதம், அவமிருத்து
மரண வேதனை இவையெல்லாம் அகற்றென வணங்கிப்
புரண நாதனைப் பிரதோடத்தில் போற்றிடத் தகுமால்”

ஆக்கம்: வசந்தா வைத்தியநாதன்
தொகுப்பு: சோதி

மேலும் வாசிக்க

விக்கிரகம்

ஆற்றலைத் தாங்கி சேமித்து வைக்கும் திறன் கல்லில் இருப்பதால் மூல கர்ப்பக்கிரகத்தில் கற்சிலைகளையே பிரதிஷ்டை செய்துள்ளனர் ஆன்றோர்கள். உற்சவத்தில் செம்பில் …

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *