முகப்பு / நோக்கம்

நோக்கம்

“எவ்வுயிரும் தன்னுயிர்போல் எண்ணியிரங்கவுந் நின்
தெய்வ அருட்கருணை செய்வாய் பராபரமே”.

அன்புசால் டென்மார்க்வாழ் தமிழ்மக்களே!

புலம்பெயர்  நாட்டில் இன்று நாம்வாழும் இயந்திரவாழ்க்கையில் எமது அடுத்த  தலைமுறையினருக்குத் தேவையான வாழ்க்கைநெறிகளையும் அதன் தத்துவங்களையும் தெளிவுபடுத்தவேண்டிய ஒரு காலகட்ட  த்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்தக் காலகட்டத்தில் எடுத்துக்கூற முற்படாவிட்டால் எமது அடுத்த  தலைமுறையானது எதுவித
வாழ்க்கை நெறிக்குள்ளேயும் தன்னை இணைத்துக் கொள்ளாது “கண்டதே காட்சி கொண்டதே  கோலம்” என்று மனம்போன போக்கில் நெறியற்ற ஒரு வாழ்வை தனது வாழ்க்கை முறையாக்கிக்கொள்ள வழிவகுத்து விடும். எனவே அவர்களை அவ்வழியில் செல்லவிடாது எம்மாலான அனைத்து வாழ்வு நெறிகளையும்  அவர்களுக்குப் புகட்டவேண்டிய மாபெரும் பணி எம்முன் காத்துக்கிடக்கின்றது.

ஆம் சைவ சமயதத்துவங்களையும் அதனுள் பொதிந்து கிடக்கும் உண்மைகளையும் விளக்கிக்கூறி சீவகாருண்யத்துடன் கூடிய உண்மையான நெறிமுறைகளை அவர்களுக்கு தெரிய வைப்பதன் மூலமாகத் தான் எமது பாரம்பரிய வாழ்க்கை  நெறிமுறையுடன் அவர்களையும் வாழவைக்க முடியுமென்பது எமது கருத்து. சைவசமயத்தில் கூறப்பட்ட சடங்கு  முறைகளையும் வழிபாடுகளையும் நாங்கள் கடைப்பிடித்து வருகின்றோமே தவிர அதன் தார்ப்பரியயங்களும் அதுபற்றிய  கருத்துக்களும் எம்மவரில் பலருக்கு தெரிவதில்லை.

இப்படியான பல குறைகளைத் தீர்த்து வைக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த சைவ தமிழ் பண்பாட்டுப் பேரவை என்ற எமது அமைப்பாகும். மேற் குறிப்பிட்ட விடயங்கள் மட்டுமன்றி காலத்தின் தேவையைக் கருத்திற்கொண்டு வேறும்பல நல்ல விடயங்களையும் படிப்படியாக செயற்படுத்தத்  திட்டமிட்டுள்ளோம். இந்த அமைப்பானது சுயநலமற்ற அமைப்பாக மட்டுமன்றி எதுவித பொருளாதார  நோக்கமோ, அரசியல் நோக்கமோ அல்லது மதவாதமோ இல்லாத சீவநேய ஒருமைபபாட்டுடன் கூடிய பாகுபாடற்ற  பண்பட்ட ஒரு அமைப்பாகச் செயற்பட திடசங்கற்பம் கொண்டு உங்களை  நாடி வந்திருக்கின்றது.  நீங்களும் இன்றே எம்முடன் இணைந்துகொண்டு எமது செயற்திட்டத்தை விரைவுபடுத்த உதவிக்கரம் கொடுக்குமாறு இந்த இணையத்தின் வாயிலாக அன்புடன்வேண்டிக் கொள்ளுகின்றோம்.

நிர்வாகத்தினர்

சைவ தமிழ் பண்பாட்டுப் பேரவை, டென்மார்க்
செயற்திட்டங்கள்

  • ஜனநாயக நெறிமுறையின் அடிப்படையில் வாழ்க்கையை வளம்படுத்தும் நல்ல பல கருத்துக்களை எமது அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துக் கூறுவது.
  • சிறுவயதிலிருந்தே பணிவன்பை வாழ்க்கை முறையாக்குவது பற்றிய விளக்கங்களை தெரியவைப்பது.
  • இதன் அடிப்படையில் சைவசமயத்தின் தார்மீக வாழ்க்கை நெறிமுறைகளை எடுத்துக்கூறி, அவர்களின் ஐயப்பாடுகளைத் தீர்த்து வைப்பது.
  • சைவ முறைகளில் நடைபெறும் அபரக்கிரிகைகளுக்கு எம்மாலியன்ற உதவிகள், ஆலோசனைகள் வழங்குவது.
  • சைவசமய நூல்களைக்கொண்ட நூல்நிலையமொன்றை அமைப்பது.
  • மக்களின் அறிவை மேம்படுத்தும் சஞ்சிகைகளை வெளியிடுவது.
  • அறிவியல், கலாச்சார மாநாடுகளை நடத்துவது.
  • மருத்துவர்களை அழைத்து மருத்துவ ஆலோசனை முகாம்களை நடத்துவது.
  •  சிறுவார்களின் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்கும் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வது.